பால் 
செய்திகள்

மாதவரம் பால் பண்ணையில் உற்பத்தி பாதிப்பு

மாதவரம் பால் பண்ணையில் ஒப்பந்த ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் சக ஊழியர்களும் பணிக்கு வரவில்லை. இதனால் 75 ஆயிரம் லிட்டர் பால் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

மாலை மலர்

சென்னை:

மாதவரம் பால் பண்ணையில் ஒப்பந்த ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இதனால் சக ஊழியர்கள் பணிக்கு வரவில்லை. இதன் காரணமாக பால் உற்பத்தி நேற்று பாதிக்கப்பட்டது.

தற்காலிக பணியாளர்களை கொண்டு பால் உற்பத்தியில் ஈடுபட்டபோது அவர்களும் அதற்கு ஒத்துழைப்பு தரவில்லை. இதனால் வடசென்னை பகுதியில் பால் விநியோகம் பாதிக்கப்பட்டது.

தினமும் சென்னையில் 13.5 லட்சம் ஆவின் பால் விநியோகம் செய்யப்படுகிறது. இதில் மாதவரம் பண்ணையில் இருந்து 4.20 லட்சம் லிட்டர், அம்பத்தூரில் இருந்து 3.80 லட்சம், சோழிங்க நல்லூரிலிருந்து 5.30 லட்சம் லிட்டர் பால் விநியோகம் செய்யப்படுகிறது. தற்போது மாதவரத்தில் கொரோனா தொற்று ஏற்பட்டதால், 75 ஆயிரம் லிட்டர் பால் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

3.50 லிட்டர் மட்டுமே விநியோகிக்கப்படுகிறது. மேலும் பால் விநியோகத்தில் கால தாமதம் ஏற்பட்டு வருகிறது. இந்த தட்டுப்பாட்டை சமாளிக்க சேலம், திருச்சி, விழுப்புரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து பால் கொண்டு வரப்பட்டு சென்னை மக்களுக்கு விநியோகிக்கப்படுகிறது.

இதுகுறித்து ஆவின் அதிகாரி ஒருவர் கூறுகையில், மாதவரம் பால் பண்ணையில் கொரோனா தொற்று ஒருவருக்கு ஏற்பட்டதால், மற்றவர்களும் பயந்து பால் உற்பத்தியில் ஈடுபடவில்லை. தற்காலிக ஊழியர்கள் மூலம் இந்த பணியை சரிசெய்ய நடவடிக்கை ஏற்பட்ட போதிலும் காலதாமதம் ஆகிறது. 75 ஆயிரம் லிட்டர் பால் தற்போது தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அதனை வெளி மாவட்டங்களில் இருந்து கொண்டுவந்து ஈடு செய்கிறோம்.

சென்னை மக்களுக்கு பால் தட்டுப்பாடு இல்லாமல் தொடர்ந்து விநியோகம் செய்து வருகிறது. இந்த பிரச்சினை சரியாக இன்னும் ஒரு வார காலம் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்றார்.