செய்திகள்

தனியார் பால் மோசம் என்று அமைச்சரே அச்சத்தையும், பீதியையும் கிளப்புவதா?: பால் முகவர்கள் சங்கம் கண்டனம்

தனியார் பால் மோசம் என்று மக்கள் மத்தியில் அமைச்சரே அச்சத்தையும், பீதியையும் உருவாக்குவதா என்று பால் முகவர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.

மாலை மலர்

சென்னை:

தமிழ்நாடு பால் முகவர்கள், தொழிலாளர்கள் நலச்சங்க தலைவர் பொன்னுசாமி, பால் வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

“தனியார் பால் நிறுவனங்கள் அதிக லாபம் கொடுப்பதால் அந்த கம்பெனிகளுக்கு ஆதரவாக பால் முகவர்கள் பேசுகிறார்கள்” என கூறியதாக நாளிதழ்கள் சிலவற்றில் செய்தி வெளியாகியுள்ளது.

கடந்த வாரம் மற்றும் நேற்று முன்தினம் மட்டுமே “தனியார் நிறுவனங்கள் பாலில் ரசாயனம் கலப்படம் செய்கின்றன” என மேடையில் நீங்கள் பேசியுள்ளீர்கள்.

ஆனால் கடந்த 2012-ம் ஆண்டில் உச்சநீதிமன்றத்தில் பாலில் கலப்படம் தொடர்பான பொது நல வழக்கு தாக்கல் செய்யப்பட்ட காலத்தில் இருந்து தற்போது வரை தனியார் பால் நிறுவனங்கள் பாலில் கலப்படம் செய்கின்றன.

எனவே அவற்றை கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுங்கள் என ஆறு ஆண்டுகளாக நாங்கள் பேசி வருவது தங்கள் அரசின் செவிகளில் விழாமல் போனதும், அந்த தகவல் தங்களின் கவனத்திற்கு வராமல் போனதும் விந்தையிலும் விந்தையாகவே இருக்கிறது.

தனியார் பால் நிறுவனங்களின் தரத்தை தொடர்ந்து கண்காணிப்பதாகட்டும், அந்நிறுவனங்களுக்கு உரிமம் வழங்குவதாகட்டும், பாலில் ரசாயனம் கலப்படம் செய்கின்ற தனியார் பால் நிறுவனங்களை கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுப்பதாக இருக்கட்டும்.

இவை அனைத்தும் மத்திய அரசின் உணவு தரக் கட்டுப்பாட்டு துறையின் கீழ்தான் வருகிறது என்பது கூட தெரியாமல் பால்வளத்துறை அமைச்சரான தாங்கள் இருப்பது இந்த துறை சார்ந்த பால் முகவர்களாகிய எங்களுக்கு மிகுந்த வேதனையாக இருக்கிறது.

பாலில் கலப்படம் செய்வோருக்கு ஆயுள் தண்டனை வழங்குகின்ற வகையில் அந்தந்த மாநில அரசுகள் சட்ட திருத்தம் கொண்டு வர வேண்டும் என கடந்த 2013 மே மாதம் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும் இதுவரை உங்கள் அரசு ஒரு துரும்பைக் கூட கிள்ளிப் போடவில்லை என்பது பொதுமக்களில் ஒருவனாக எங்களுக்கு கூடுதல் வேதனையை தந்திருக்கிறது.

தமிழகத்தின் தினசரி பால் தேவையில் சுமார் 16.4 சதவீதம் மட்டுமே ஆவின் பூர்த்தி செய்யும் போது மீதமுள்ள 83.6 சதவீதம் பால் தேவைகளுக்கு பொது மக்கள் எங்கே போவார்கள்? என்பதை நீங்கள் சற்றே சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

பால் முகவர்களாகிய நாங்கள் மக்கள் நலன் சார்ந்து செயல்பட எப்போதும் தயாராகவே இருக்கிறோம். ஆனால் எங்களை பயன்படுத்திக் கொள்ளவும், மக்கள் நலன் சார்ந்து உரிய நடவடிக்கை எடுக்கவும் இதுவரை தமிழக அரசு தவறி விட்டது.

எனவே இனியாவது தாங்கள் வழிப்போக்கன் போல போகிற போக்கில் பேசி விட்டு மக்கள் மத்தியில் அச்சத்தையும், பீதியையும் உருவாக்காமல் ஆக்கபூர்வமான வழிகளைப் பற்றி சிந்தியுங்கள்.

தமிழக பால்வளத்துறை அமைச்சரான தங்களுக்கும், தமிழக அரசுக்கும், ஆவின் நிறுவனத்திற்கும் பால் முகவர்களாகிய நாங்களும், எங்களது சங்கமும் எப்போதும் முழு ஒத்துழைப்பு அளிக்க தயாராகவே இருக்கிறோம் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.