பயங்கரவாதி 
செய்திகள்

தமிழக-கர்நாடக எல்லையில் பயிற்சி முகாம்களை அமைக்க பயங்கரவாதிகள் திட்டம்

தமிழகம், கர்நாடக எல்லையில் பயங்கரவாத பயிற்சி முகாம்களை அமைக்க பயங்கரவாதிகள் திட்டம் தீட்டி இருப்பதாக என்.ஐ.ஏ. விசாரணையில் தெரிய வந்துள்ளது.

மாலை மலர்

சென்னை அம்பத்தூரில் இந்து முன்னணி பிரமுகர் சுரேஷ்குமார் கொலை வழக்கில் தொடர்புடைய 3 பயங்கரவாதிகளை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.

இவர்களில் காஜா மொய்தீன், சையது அலி நவாஸ் ஆகிய இருவரும் டெல்லியில் பிடிபட்டனர். இவர்களின் கூட்டாளியான அப்துல் சமீம் மற்றும் தவுபீக் ஆகியோர் களியக்காவிளையில் சப்-இன்ஸ்பெக்டர் வில்சனை சுட்டுக்கொன்ற வழக்குகளில் கைதானார்கள்.

இதையடுத்து பயங்கரவாதிகளுக்கு உதவிகளை செய்ததாக சென்னை மற்றும் பெங்களூரில் பலர் கைது செய்யப்பட்டனர். காஞ்சிபுரத்தை சேர்ந்த பச்சையப்பன், சென்னை ராஜேஷ், சேலத்தை சேர்ந்த அன்பரசன், அப்துல்ரகுமான், லியாகத் அலி, பெங்களூர் முகமது ஹனீப்கான், இம்ரான்கான், முகமது சயீத், உசேன் செரீப் ஆகிய 10 பேரை கியூ பிரிவு போலீசார் கைது செய்திருந்தனர். இந்த வழக்கு என்.ஐ.ஏ.வுக்கு மாற்றப்பட்ட பிறகு 10 பேரையும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர்.

ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தின் தமிழக தலைவராக செயல்பட்ட காஜாமொய்தீன் அந்த இயக்கத்தில் 13 பேரை சேர்த்து இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

தமிழகம், கர்நாடகா, கேரளா மாநிலங்களை சேர்ந்த இவர்கள் சமீபத்தில் நேபாள தலைநகர் காத்மண்டுவில் ஒன்றாக கூடி பேசியுள்ளனர்.  பின்னர் தனித்தனி குழுவாக பிரிந்து சதித்திட்டத்தில் ஈடுபட தயாரானபோதுதான் போலீசில் சிக்கினர்.

கர்நாடக மாநில வனப்பகுதியில் பயங்கரவாத பயிற்சி முகாமை அமைக்க திட்டமிட்டு செயல்பட்டதையும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். வெளிநாடுகளில் பயங்கரவாத பயற்சி பெறவும் பயங்கரவாதிகள் திட்டம் தீட்டி செயல்பட்டதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.