செய்திகள்

மைக்கேல் சூமாக்கர் போராடிக் கொண்டிருக்கிறார்: எஃப்.ஐ.ஏ. தலைவர் சொல்கிறார்

பார்முலா ஒன் ஜாம்பவான் மைக்கேல் சூமாக்கர் இன்னும் போரடிக் கொண்டிருக்கிறார் என்று முன்னாள் பெர்ராரி அணி தலைவரும், எஃப்.ஐ.ஏ. தலைவரும் ஆன ஜீன் டாட் தெரிவித்துள்ளார்.

மாலை மலர்

பார்முலா ஒன் பந்தயத்தில் முடிசூடா மன்னனாக திகழ்ந்தவர் ஜெர்மனியின் மைக்கேல் சூமாக்கர். 7 முறை பார்முலா ஒன் சாம்பியன் பட்டத்தை வென்ற இவர், கடந்த 2013-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 29-ந்தேதி பிரான்ஸ் ஆல்ப்ஸ் மலையில் பனி சருக்கு விளையாட்டில் கலந்து கொண்டபோது எதிர்பாராத விதமாக விபத்திற்குள்ளானார்.

இந்த விபத்தில் சூமாக்கரின் தலை பனிப்பாறையில் பலமாக மோதியதில் மூளை பலமாக பாதிக்கப்பட்டது. இதனால் உடனடியாக அவர் ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டடார். மீட்டகப்பட்ட நாளில் இருந்தே சூமாக்கர் ஹோமாவில் இருந்து வருவதாக கூறப்படுகிறது. தலைசிறந்த மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சூமாக்கர், கடந்த 2014-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஜெனீவா கொண்டு வரப்பட்டு, தனிப்பட்ட முறையில் அவருக்க சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சூமாக்கரின் உடல்நிலை குறித்து அவரது குடும்பத்தினரை தவிர மற்ற யாருக்கும் தெரியாது. இந்நிலையில் முன்னாள் பெர்ராரி அணியின் தலைவரும், தற்போதைய எஃப்.ஐ.ஏ. தலைவரும் ஆன ஜீன் டோட், பாரிஸில் நடைபெற்ற ஹால் ஆஃப் ஃபேம் விழாவில் கலந்து கொண்டார். அப்போது சூமாக்கர் இன்னும் போராடிக் கொண்டிருக்கிறார் என்றார்.

இதுகுறித்து ஜீன் டோட் கூறுகையில் ‘‘நாம் சூமாக்கரை மிஸ் செய்கிறோம். இவர் அங்கே இருக்கிறார். தற்போது வரை போராடிக் கொண்டிருக்கிறார். அந்த போராட்டம் இன்னும் சென்று கொண்டிருக்கிறது. சூமாக்கர் மிகவும் சிறப்பானவர். அதுவும் கார் பந்தயத்திற்கு சிறப்பானவர். எனக்கு மிகவும் சிறந்தவர். மேலும், சிறந்த நண்பர்’’ என்றார்.

7 முறை பார்முலான ஒன் சாம்பியன் பட்டம் வென்றுள்ள சூமாக்கர், 91 முறை கிராண்ட்பிரிக்ஸ் போட்டியில் வெற்றி பெற்றுள்ளார். வருகிற 29-ந்தேதியுடன் அவர் விபத்திற்குள்ளாகி நான்கு வருடங்கள் நிறைவடைய இருக்கிறது.