செய்திகள்

எம்.ஜி.ஆர். சிலையை திறக்கும் ரஜினி- பா.ஜனதாவுக்கு இழுக்க முயற்சியா?

டாக்டர் எம்.ஜி.ஆர். நிகர்நிலை பல்கலை கழகத்தில் நாளை எம்.ஜி.ஆர். சிலையை ரஜினிகாந்த் திறந்து வைக்கிறார். இந்த விழாவில் ரஜினியை பா.ஜனதா பக்கம் இழுக்க முயற்சி நடைபெறுவதாக தெரிகிறது. #mgrstatue #rajinikanth #bjp

மாலை மலர்

சென்னை:

ரஜினி, கமலின் அரசியல் பிரவேசத்தால் தமிழக அரசியல் களம் எப்படி இருக்கும் என்ற எதிர் பார்ப்பு எல்லோரிடமும் இருக்கிறது. அதற்கு மற்றொரு காரணம் ரஜினி ஆன்மீக அரசியல் என்ற புதிய பாதையை தேர்வு செய்து இருக்கிறார். கமல் திராவிட அரசியலை அடித்தளமாக வைத்துள்ளார்.

இருவருமே தனித்து போட்டியிடுவார்களா? கூட்டணி வைத்துக் கொள்வார்களா? என்பதை இப்போது சொல்ல முடியாது.

ஆனால் தேசிய கட்சிகளின் பார்வை இருவர் மீதும் இருக்கும் என்பதை மட்டும் உறுதியாக சொல்ல முடியும்.

நாட்டின் பல பகுதிகளிலும் காலூன்றி வரும் பா.ஜனதா தமிழகத்திலும் தடம் பதிக்க முன்னோட்டம் பார்த்து வருகிறது.

சரியான தலைமை இல்லாததால் தள்ளாடும் அ.தி.மு.க. கணிசமான வாக்கு வங்கியை வைத்திருக்கிறது. அந்த வாக்கு வங்கியை தங்களுக்கு ஆதரவாக திருப்புவது எப்படி? என்ற ஆலோசனையில் பா.ஜனதா ஈடுபட்டுள்ளது.

ரஜினியை தங்கள் பக்கம் இழுக்க இதுவரை எடுத்த முயற்சிகள் எதுவும் பலன் அளிக்கவில்லை. தனித்துப் போட்டி என்பதை ரஜினி தெளிவாக அறிவித்து விட்டார்.

சொன்னாலும் விட்டு விடுவார்களா என்ன? ஓசையில்லாமல் அரசியல் களம் நகர்ந்து கொண்டுதான் இருக்கிறது.

டாக்டர் எம்.ஜி.ஆர். நிகர்நிலை பல்கலை கழகத்தில் நாளை (5-ந்தேதி) நடைபெறும் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் ரஜினி காந்த் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்கிறார். அங்கு அமைக்கப்பட்டுள்ள எம்.ஜி.ஆரின் முழு உருவ வெண்கல சிலையையும் அவர் திறந்து வைக்கிறார்.

ரஜினி, எம்.ஜி.ஆர். சிலையை திறந்து வைப்பது தான் அரசியல் களத்தில் உற்று நோக்கப்படுகிறது.

எம்.ஜி.ஆர். பல்கலை கழகத்தின் வேந்தர் ஏ.சி.சண்முகம். இவர் புதிய நீதிக்கட்சியின் தலைவர். இந்த கட்சி பா.ஜனதா கூட்டணியில் இருக்கிறது.

எனவே ரஜினியை பா.ஜனதா பக்கம் இழுக்கும் முயற்சிக்கு இந்த விழா அடித்தளமாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

மேலும் கமல் கடவுள் மறுப்பு கொள்கை கொண்டவர். ரஜினி அதற்கு நேர் எதிரானவர். எனவே எம்.ஜி.ஆரையும் அ.தி.மு.க. வையும் நேசிக்கும் தொண்டர்களின் ஆதரவும் ரஜினிக்கு கிடைக்கலாம் என்ற கருத்தும் நிலவுகிறது. #tamilnews #mgrstatue #rajinikanth #bjp