செய்திகள்

தேனியில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா: ரூ.99 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார் முதலமைச்சர்

தேனியில் இன்று நடைபெறும் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.

மாலை மலர்

தேனி:

தமிழகம் முழுவதும் அரசு சார்பில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா நடத்தப்பட்டு வருகிறது. அதன் படி தேனி அருகே இன்று மாலை 3 மணி அளவில் விழா நடைபெறுகிறது. விழாவுக்கு சபாநாயகர் தனபால் தலைமை தாங்கி பேசுகிறார். துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் முன்னிலை வகித்து பேசுகிறார்.

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொண்டு எம்.ஜி.ஆர். உருவ படத்தை திறந்து வைத்து பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள் மற்றும் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி பேசுகிறார்.

பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை சிறப்புரையாற்றுகிறார். தேனி எம்.பி. பார்த்திபன், ஜக்கையன் எம்.எல்.ஏ. ஆகியோர் வாழ்த்தி பேசுகின்றனர். முன்னதாக தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் வரவேற்று பேசுகிறார். முடிவில் மாவட்ட கலெக்டர் வெங்கடாசலம் நன்றி கூறுகிறார்.

நூற்றாண்டு விழாவில் தமிழக அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்கின்றனர். விழாவுக்காக சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மாவட்டத்தின் எல்லையான ஆண்டிப்பட்டி கணவாய் பகுதியில் பிரம்மாண்ட வளைவு அமைக்கப்பட்டு ஏராளமான டிஜிட்டல் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. விழாவுக்காக பயனாளிகள் மற்றும் பொதுமக்கள் பஸ்களில் அழைத்து வரப்பட உள்ளதால் மேடை அருகிலும் ஆர்.எம்.டி.சி காலனி பகுதியிலும் வாகன நிறுத்தங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ரூ.21 கோடியே 19 லட்சத்து 50 ஆயிரத்தில் நிறைவு செய்யப்பட்ட 26 திட்டப் பணிகளை தொடங்கி வைக்கிறார். ரூ.22 கோடியே 48 லட்சத்து 65 ஆயிரம் மதிப்பிலான 22 புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார். அரசின் பல்வேறு துறைகள் சார்பில் 20 ஆயிரத்து 293 பயனாளிகளுக்கு ரூ.99 கோடியே 46 லட்சத்து 94 ஆயிரம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். மேலும் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கும் விழா மேடையில் முதல்அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பரிசுகள் வழங்குகிறார்.

விழா பாதுகாப்புக்காக மதுரை, திண்டுக்கல், விருதுநகர், நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து போலீசார் வரவழைக்கப்பட்டுள்ளனர். விழா மேடை மற்றும் தேனி பகுதியில் 8 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

மேலும் போலீஸ் உயர் அதிகாரிகள் தேனியில் முகாமிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகளை கண்காணித்து வருகின்றனர். விழாவுக்காக இன்று பிற்பகல் 1.30 மணி முதல் இரவு 7 மணி வரை தேனியில் போக்குவரத்து வழித்தடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.