தமிழக அரசின் சார்பில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா மாவட்டந்தோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. விருதுநகர் மாவட்டத்தில் இந்த விழா, இன்று மாலை சிவகாசியில் நடைபெறுகிறது.
விழாவுக்காக சிவகாசி -திருத்தங்கல் சாலையில் அண்ணாமலையார் நகரில் பிரமாண்ட மேடை அமைக்கப்பட்டுள்ளது.
மாலை 3 மணிக்கு நடைபெறும் விழாவில், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், சபாநாயகர் தனபால், பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை மற்றும் அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்கின்றனர். விழாவை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
விருதுநகர், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மற்றும் கோவை, திண்டுக்கல் மாவட்டங்களில் இருந்து 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் வரவழைக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.
விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி விருதுநகர் மாவட்டத்தில் ரூ.49 கோடி மதிப்பில் செய்யப்பட்டுள்ள பணிகளை திறந்து வைத்து மக்களுக்கு அர்ப்பணிக்கிறார். ரூ.13 கோடி மதிப்பிலான 6 புதிய திட்டங்களுக்கும் அவர் அடிக்கல் நாட்டுகிறார்.
தொடர்ந்து 21 ஆயிரத்து 885 பயனாளிகளுக்கு ரூ. 117 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வழங்கி பேசுகிறார்.
விழா மேடையின் அருகில் செய்தி-மக்கள் தொடர்புத்துறை சார்பில் எம்.ஜி.ஆர். புகைப்படக் கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது. இதில் ஏராளமான எம்.ஜி.ஆர். புகைப்படங்கள் இடம் பெற்றுள்ளன.
விழாவை முன்னிட்டு இன்னிசை மற்றும் கலை நிகழ்ச்சிகளும் காலை முதலே நடைபெறுகின்றன. இதனை ஏராளமானோர் கண்டு ரசித்தனர்.
விழாவுக்கு வருபவர்கள் வசதிக்காக குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டு உள்ளன. அமைச்சரும், விருதுநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளருமான கே.டி. ராஜேந்திர பாலாஜி, கலெக்டர் சிவஞானம், போலீஸ் சூப்பிரண்டு ராஜராஜன் ஆகியோர் விழா ஏற்பாடுகளை பார்வையிட்டனர்.