சேலம்:
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மீண்டும் மழை பெய்ததால் மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது.
நேற்று 3,674 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று மீண்டும் அதிகரித்து 4056 கன அடியானது.
மேட்டூர் அணையில் இருந்து காவிரி ஆற்றில் டெல்டா மாவட்ட பாசனத்திற்காக 3500 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களாக அணைக்கு வரும் தண்ணீரும், அணையில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீரும் ஒரே அளவாக இருப்பதால் அணையின் நீர் மட்டம் அதே அளவில் நீடித்தது.
இந்த நிலையில் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்ததால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று உயர தொடங்கி உள்ளது.
நேற்று 84.99 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று 85.02 அடியாக உயர்ந்தது. இனி வரும் நாட்களில் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிக்கும் பட்சத்தில் அணையின் நீர்மட்டம் வேகமாக உயர வாய்ப்பு உள்ளது.
வைகை அணை நீர்பிடிப்பு பகுதியில் மழை பெய்துள்ளதால் அணைக்கு 1451 கன அடி நீர் வருகிறது. அணையின் நீர்மட்டம் 56.76 அடியாக உள்ளது. வைகை அணையில் இருந்து பாசனத்திற்காக கடந்த 1-ந் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. தற்போது திண்டுக்கல், தேனி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருவதால் விவசாயத்திற்கு போதுமான தண்ணீர் கிடைத்துள்ளது.
எனவே வைகை அணையில் இருந்து பாசனத்திற்காக திறக்கப்பட்ட தண்ணீர் நேற்று 710 கன அடியாக குறைக்கப்பட்டது. தற்போது பாசனத்திற்காக திறந்து விடப்படும் தண்ணீர் முழுவதுமாக நிறுத்தப்பட்டுள்ளது. மதுரை மாநகர குடிநீருக்காக மட்டும் 60 கன அடி நீர் திறக்கப்படுகிறது.