செய்திகள்

மெட்ரோ ரெயிலில் மீண்டும் சிக்னல் கோளாறு- 3 தடவை நடுவழியில் நிறுத்தம்

மெட்ரோ ரெயில் பாதையில் ஒரே வாரத்தில் 3 தடவை சிக்னல் கோளாறு ஏற்பட்டுள்ளது. இதனால் 30 நிமிடங்கள் வரை பயணிகள் சேவை முடங்கியது. #MetroTrain

மாலை மலர்

சென்னை:

சென்னை மாநகர போக்குவரத்து நெருக்கடியை குறைப்பதற்காகவும் விரைவு பயணத்துக்காகவும் மெட்ரோ ரெயில் திட்டம் உருவாக்கப்பட்டது.

கோயம்பேடு- ஆலந்தூர், சின்னமலை- விமான நிலையம் வரை உயர் மட்டப் பாதையிலும், திருமங்கலம்- சென்ட்ரல், சைதாப்பேட்டை- டி.எம்.எஸ். வரை சுரங்கப்பாதையிலும் மெட்ரோ ரெயில் சேவை நடந்து வருகிறது. மேலும் சென்னை மாநகரம் முழுவதும் மெட்ரோ ரெயில் சேவையை விரிவுப்படுத்தும் பணிகளும் நடந்து வருகிறது.

தற்போது மெட்ரோ ரெயில் பாதையில் ஒரே வாரத்தில் 3 தடவை ‘சிக்னல்’ கோளாறு ஏற்பட்டுள்ளது. இதனால் 30 நிமிடங்கள் வரை பயணிகள் சேவை முடங்கியது.

கடந்த 8-ந்தேதி 30 நிமிடங்களும், 11-ந்தேதி 25 நிமிடங்களும் நேற்று 12-ந்தேதி 30 நிமிடங்களும் சிக்னல் கோளாறால் போக்குவரத்து சேவை பாதிக்கப்பட்டது. இதனால் மெட்ரோ ரெயில்கள் ஆங்காங்கே நடுவழியில் நின்றன. மெட்ரோ பயணிகள் பெரும் அவதிப்பட்டனர்.

இதுகுறித்து மெட்ரோ பயணி ஒருவர் கூறியதாவது:-

சென்னை மாநகரத்தில் விரைவு பயணத்துக்காக மெட்ரோ ரெயில் போக்குவரத்து சேவையில் அடிக்கடி சிக்னல் கோளாறு ஏற்பட்டு வருவதால் பயணிகள் அவதிப்பட்டு வருகிறார்கள். ஒரே வாரத்தில் 3 முறை சிக்னல் கோளாறு என்பது ஏற்புடையது அல்ல.

மெட்ரோ ரெயில்கள் ஆங்காங்கே நடு வழியில் சிக்னல் கோளாறு ஏற்பட்டு நிறுத்தப்படுவதால் பயணிகள் உரிய நேரத்தில் செல்ல முடியவில்லை. இதனால் மெட்ரோ ரெயில் மீது நம்பகத்தன்மை குறையும். பயணிகளுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாத வகையில் மெட்ரோ ரெயில் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார். #MetroTrain