செய்திகள்

சென்னையில் இரவு நேரத்தில் இடியுடன் மழை பெய்யும்: வானிலை மையம் தகவல்

வெப்ப சலனம் காரணமாக சென்னை மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் மாலை அல்லது இரவு நேரத்தில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மாலை மலர்

மழை பெய்யாததால் ஏரி, குளங்கள், கிணறுகள் வறண்டு தமிழகம் முழுவதும் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது.

வடகிழக்கு பருவ மழை கை கொடுத்தால் மட்டுமே இனி வாழ முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

குடம் குடிநீருக்கு தவிக்கும் நிலையில் தமிழகத்தின் பல பகுதிகளில் மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் வெப்ப சலனம் காரணமாக மழை பெய்து வருகிறது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பெய்து வரும் மழையால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சென்னையில் கோடை மழை ஒரு துளி கூட பெய்யாமல் முற்றிலும் வறண்டு கிடந்தது.

ஆழ்துளை கிணறுகள் எல்லாவற்றிலும் நீர் மட்டம் குறைந்து தண்ணீர் பிரச்சினை ஏற்பட்டது. இந்த நிலையில் 2 நாட்கள் பெய்த மழை பூமியின் வெப்பத்தை தணித்துள்ளது.

எப்போதும் அனல் காற்றால் தவிக்கும் சென்னை நகர மக்கள் இப்போது இதமான காற்றை சுவாசிக்கிறார்கள்.

சென்னையில் திடீர் மழை பெய்து மக்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. எப்போதும் சுட்டெரிக்கும் வெயிலின் உஷ்ணத்தில் சென்றுவரும் வாகன ஓட்டிகள் தற்போது பெய்த மழையால் உள்ளம் குளிர்ந்துள்ளனர்.

நகரில் ஒரு சில பகுதியில் பலத்த மழையும் ஒரு சில இடங்களில் லேசான மழையும், சில பகுதிகளில் மழை பெய்யாமலும் உள்ளன. ஆனால் இந்த மழை சென்னை மக்களுக்கு நீண்ட நாட்களுக்கு பிறகு கிடைத்திருப்பதால் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

சென்னையில் 2-வது நாளாக அநேக பகுதிகளில் மழை பெய்தது. நேற்று பகலில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்த போதிலும் நள்ளிரவில் மழை பெய்ய தொடங்கியது.

சென்னையில் அநேக இடங்களில் மிதமான மழை பெய்ததால் சாலைகளில் ஒருசில இடங்களில் மழை நீர் தேங்கி நின்றது.

அதிகாலை பெய்ய தொடங்கிய மழை காலை வரையில் சிறு சிறு தூரல்களாக தூரிக்கொண்டே இருந்தன. சென்னையை ஒட்டியுள்ள புறநகர் பகுதிகளிலும் விடிய விடிய மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

குடிநீர் தட்டுப்பாட்டில் சிக்கி தவிக்கும் சென்னை மக்களுக்கு இந்த மழை சற்று ஆறுதலை தந்துள்ளது.

2 நாட்கள் மழை பெய்துள்ளதால் கிணறுகள் நிரம்பி வருகின்றன. தண்ணீர் இல்லாமல் வற்றிய ஆழ்துளை கிணறுகளில் கூட இப்போது நீர்மட்டம் உயர்ந்து தண்ணீர் வருகிறது.

மழை குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியதாவது:-

மேற்கு திசையில் இருந்து வீசும் காற்றில் ஏற்பட்டுள்ள வேக மாறுபாடு காரணமாகவும் வெப்ப சலனம் காரணமாகவும் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக எண்ணூர், செம்பரம்பாக்கம் 9 செ.மீ. மழையும், பூந்தமல்லியில் 7 செ.மீ., திருவள்ளூர், சென்னை விமான நிலையம் 6 செ.மீ. மழையும் பெய்துள்ளது.

அடுத்த 24 மணி நேரத்தில் வடதமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களிலும் தென் தமிழகத்தின் ஓரிரு இடங்களிலும் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். ஒரு சில இடங்களில் மாலை அல்லது இரவு நேரத்தில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.