அய்யலூர் சந்தையில் குவிந்த வியாபாரிகள் 
செய்திகள்

கொரோனா அச்சுறுத்தலையும் மீறி அய்யலூரில் களைகட்டிய ஆட்டுச்சந்தை

கொரோனா அச்சுறுத்தலையும் மீறி அய்யலூரில் இன்று ஆட்டுச்சந்தை விற்பனை களைகட்டியது.

மாலை மலர்

வடமதுரை:

திண்டுக்கல் அருகில் உள்ள அய்யலூரில் வாரந்தோறும் வியாழக்கிழமை ஆட்டுச்சந்தை நடைபெற்று வருகிறது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இன்று சந்தை நடக்குமா அல்லது நடக்காதா என்ற சந்தேகம் பொதுமக்கள் மத்தியில் நிலவி வந்தது.

ஏனெனில் சந்தையில் விற்பனை செய்வதற்கு முதல்நாள் இரவே பல்வேறு ஊர்களில் இருந்து ஆடுகள் மற்றும் கோழிகளை விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வருவார்கள். எவ்வித தகவலும் வராததால் வழக்கம்போல் ஏராளமான விவசாயிகள் கால்நடைகளை கொண்டு வந்தனர்.

இன்று காலை முதல் ஆடுகள் விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்றது. பங்குனிமாதம் என்பதால் கிராமங்களில் கோவில் திருவிழாக்கள் நடத்தப்படுவது வழக்கம். அதற்காகவும் விடுமுறை தினத்தில் உறவினர்கள் மற்றும் குடும்பத்தினர் ஒன்றாக இருப்பதால் அசைவ விருந்து சமைப்பதற்காகவும் ஆடுகளை வாங்கிச்சென்றனர்.

4 கிலோ எடை கொண்ட ஆட்டுக்குட்டி ரூ.5ஆயிரம் வரை விலைபோனது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பிராய்லர் கோழிகளை பொதுமக்கள் தவிர்த்து வருகின்றனர். இதனால் நாட்டுக்கோழிகள் அதிகளவில் விற்பனையானது. ஒரு கோழி ரூ.320 வரையிலும், சேவல் ரூ.500 மற்றும் அதற்கு மேலும் விற்பனையானது. சந்தை கூடிய சிலமணிநேரத்திலேயே ஆடுகள் மற்றும் கோழிகள் விற்றுத்தீர்ந்தன.

மக்கள் கூட்டம் அதிகளவில் கூடக்கூடாது என்று கொரோனா தடுப்பு நடவடிக்கையாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வரும் நிலையில் அய்யலூர் சந்தையில் இன்று ஆடுகள் மற்றும் கோழிகளை வாங்க அதிகளவு வியாபாரிகள் ஒன்று திரண்டது பரபரப்பை ஏற்படுத்தியது.