பல்லடம்:
தொடுதிரை செல்போன் பெற ஆன்லைன் மூலம் பதிவு செய்த பல்லடம் வியாபாரிக்கு ஒளிரும் கைக்கெடிகாரம் பார்சலில் வந்தது. இதனால் நூதன முறையில் மோசடி செய்யப்பட்டதை அறிந்த வியாபாரி அதிர்ச்சி அடைந்தார்.
இது பற்றிய விவரம் வருமாறு:-
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை சேர்ந்தவர் குபேரன் (வயது 40). இவர் பல்லடம் என்.ஜி.ஆர். ரோட்டில் எலெக்ட்ரிக் கடை வைத்து நடத்தி வருகிறார். சில தினங்களுக்கு முன் தன்னுடைய செல்போனில் முகநூல் பதிவுகளை பார்த்துக்கொண்டிருந்தார். அப்போது அதில் வந்த ஒரு விளம்பரத்தை அவர் கவனித்தார். அதில் 2,499 ரூபாய்க்கு தொடுதிரை செல்போன் வழங்கப்படுவதாக குறிப்பிடப்பட்டிருந்தது.
இதை பார்த்த வியாபாரி குபேரன் உடனடியாக அந்த விளம்பரத்தின் கீழ் வந்த எண்ணுக்கு தொடர்புகொண்டு தனக்கு ஒரு தொடுதிரை செல்போன் வேண்டும் என்று கேட்டு பதிவு செய்தார்.
இந்த நிலையில் சம்பவத்தன்று குபேரனுக்கு கூரியர் மூலம் பார்சல் வந்தது. அதை கொண்டு வந்த நபர் கூரியர் பார்சல் கட்டணமாக கூடுதலாக ரூ.150 கேட்டார். அதையும் சேர்த்து குபேரன் கொடுத்தார். பின்னர் அவருக்கு வந்த பார்சலை பிரித்து பார்த்தார். அதில் அவர் எதிர்பார்த்தபடி தொடுதிரை செல்போன் இல்லை. ஆனால் அதற்கு பதிலாக சிறுவர்கள் அணியும் ஒளிரும் டிஜிடல் கைக்கெடிகாரம் இருந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த குபேரன் பார்சல் கொண்டு வந்தவரிடம் இதுபற்றி கேட்டார். ஆனால் அவர் தனக்கு எதுவும் தெரியாது. வேண்டும் என்றால் நீங்கள் அது தொடர்பான எண்ணில் தொடர்பு கொண்டு பேசுங்கள் என்று ஒரு எண் கொடுத்தார். அதில் தொடர்பு கொண்டு பேசியபோது அவர்கள் இங்கு புக்கிங் மட்டுமே செய்யப்படுகிறது. வேறு ஒரு எண் கொடுக்கிறோம் அதில் பேசுங்கள் என்று கூறி மற்றொரு எண் கொடுத்தனர். ஆனால் குபேரன் அந்த எண்ணில் தொடர்பு கொள்ள பலமுறை முயற்சித்தும் கிடைக்கவில்லை.
இதனால் தான் நூதன முறையில் ஏமாற்றப்பட்டதை அறிந்தார்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.