மேலூர்:
தமிழகத்தில் திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி உள்ளிட்ட 4 சட்டமன்ற தொகுதியில வருகிற 19-ந் தேதி இடைத்தேர்தல் நடை பெற உள்ளது. இதையொட்டி தொகுதிகளில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலையொட்டி மதுரையில் முக்கிய சாலைகளில் தேர்தல் பறக்கும் படையினர் இரவு பகலாக ரோந்து சுற்றி வருகின்றனர்.
மேலூர் அருகே உள்ள சிட்டம்பட்டி டோல்கேட்டில் இன்று அதிகாலை தேர்தல் பறக்கும் படை அதிகாரி ஜெகன்நாராயணன், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முனியாண்டி தலைமையிலான குழுவினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது சென்னையில் இருந்து வந்த காரை மறித்து சோதனையிட்டபோது அதில் 2 கிலோ 687 கிராம் தங்க நகைகள் இருந்தது. காரில் இருந்த பிரவீன்சிங் உள்பட 4 பேரிடம் நகைகளுக்கான ஆவணங்கள் குறித்து அதிகாரிகள் கேட்டனர். அவர்கள் மதுரையில் உள்ள வியாபாரிகளிடம் காண்பிப்பதற்காக நகைகளை கொண்டு வருவதாகவும் ஆவணங்கள் இல்லை எனவும் கூறினர்.
இதையடுத்து அதிகாரிகள் நகை மற்றும் காரை பறிமுதல் செய்தனர். 2 கிலோ 687 கிராம் நகை கலெக்டர் அலுவலகத்தில் உள்ள கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது. #LokSabhaElections2019