ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் 3 நாட்கள் ஆடிப்பூர 25-ந் தேதி தொடங்கி நடந்து வருகிறது. தொடக்க நாளான்று காலை 10.45 மணிக்கு பங்காரு அடிகளார் சித்தர்பீடம் வருகை தந்தபோது மேள தாளங்கள் முழங்க அவருக்கு பாத பூஜை செய்து வரவேற்பு அளிக்கப்பட்டது.
மாலை 4 மணி முதல் அம்மனுக்கு வேண்டுதல் செய்தவர்கள் தீச்சட்டி எடுத்து வந்து வேண்டுதலை நிறைவேற்றினர்.
கலசவிளக்கு வேள்வியை மாலை 4.45 மணியளவில் ஆதிபராசக்தி ஆன்மிக இயக்க தலைவர் லட்சுமிபங்காரு அடிகளார் தொடங்கி வைத்தார். நேற்று காலை 6 மணிக்கு கஞ்சி வழங்கும் நிகழ்ச்சியை ஆன்மிக இயக்கத் துணைத் தலைவர் கோ.ப. செந்தில்குமார் தொடங்கி வைத்தார்.
காலை 6.45 மணிக்கு பங்காரு அடிகளார் வீட்டிலிருந்து லட்சுமி பங்காரு அடிகளாரால் எடுத்து வரப்பட்ட தாய் வீட்டுக் கஞ்சிக்கு சித்தர் பீடத்தில் சிறப்பான வரவேற்பு கொடுக்கப்பட்டது. தாய்க்கஞ்சி கருவறை அம்மனுக்குப் படைக்கப்பட்டது.
பால் அபிஷேக நிகழ்ச்சியை லட்சுமி பங்காரு அடிகளார், துணைத் தலைவர்கள் கோ.ப.அன்பழகன், கோ.ப.செந்தில்குமார் மற்றும் ஸ்ரீதேவி ரமேஷ் முன்னி லையில் பங்காரு அடிகளார் தொடங்கி வைத்தார்.
பால் அபிஷேக நிகழ்ச்சியில் பங்கேற்க 6 கிலோ மீட்டர் தூரத்திற்கும் மேலாக பக்தர்கள் கூட்டமாக வரிசையில் நின்று தொடர்ந்து வந்து கொண்டிருந்தனர். இன்று மாலை வரை தொடர்ந்து பால் அபிஷேகம் நடைபெறும்.