செய்திகள்

எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.வுக்கு மந்திரி கொலை மிரட்டல்: மன்னிப்பு கேட்டார் காஷ்மீர் முதல்வர்

சட்டசபை விவாதத்தின்போது எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.வுக்கு மந்திரி கொலை மிரட்டல் விடுத்தது தொடர்பாக முதலமைச்சர் மெகபூபா முப்தி மன்னிப்பு கேட்டுள்ளார்.

மாலை மலர்

ஸ்ரீநகர்:

நாடு முழுவதும் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) அமலுக்கு வந்துள்ள நிலையில் ஜம்மு காஷ்மீரில் மட்டும் இன்னும் நடைமுறைக்கு வரவில்லை. ஜிஎஸ்டியை நடைமுறைப்படுத்துவது தொடர்பான தீர்மானம் நேற்று சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டு விவாதம் நடைபெற்றது. விவாதத்தின்போது கடும் அமளி ஏற்பட்டது.

மந்திரி இம்ரான் ரசா அன்சாரிக்கும், எதிர்கட்சியான தேசிய மாநாட்டுக் கட்சி எம்.எல்.ஏ. தேவேந்திர ரானாவுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது, ரானாவை கொலை செய்துவிடுவதாக அன்சாரி மிரட்டும் தொனியில் பேசியுள்ளார். அவரது பேச்சு உறுப்பினர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில் ஜி.எஸ்.டி. விவாதம் இன்று மீண்டும் தொடங்கியபோது, இந்த கொலை மிரட்டல் விவகாரம் வெடித்தது. மந்திரி ரசா மீது எப்ஐஆர் பதிவு செய்ய வேண்டும் என எதிர்க்கட்சி வலியுறுத்தியது. இதையடுத்து மந்திரி பேசியதை அவைக்குறிப்பில் இருந்து நீக்குவதாக சபாநாயகர் அறிவித்தார்.

பின்னர் முதலமைச்சர் மெகபூபா முக்தி பேசும்போது, மந்திரி இம்ரான் ரசா அன்சாரி பேசியதற்காக உறுப்பினர் ரானாவிடம் மன்னிப்பு கேட்பதாக தெரிவித்தார். அவரது மன்னிப்பை ஏற்றுக் கொண்ட ரானா, அவையின் கண்ணியத்தை காப்பாற்றியதற்காக முதல்வருக்கு நன்றி கூறியுள்ளார்.

இன்றைய விவாதத்தின் முடிவில் ஜி.எஸ்.டி.யை நடைமுறைப்படுத்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.