சென்னை:
தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு குறித்து ஆய்வு செய்வதற்காக 5 பேர் கொண்ட மத்திய குழுவினர் நேற்று முன் தினம் இரவு சென்னை வந்தனர்.
தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் அதிகாரிகளுடன் அவர்கள் ஆலோசனை நடத்தினார்கள். தொடர்ந்து சென்னையில் அரசு ஆஸ்பத்திரிகளில் ஆய்வு மேற் கொண்டனர்.
இன்று 2-வது நாளாக மத்திய குழுவினர் டெங்கு காய்ச்சல் பாதிப்பு குறித்து ஆய்வு செய்தனர். 2 குழுக்களாக பிரிந்து சென்ற டெல்லி அதிகாரிகளில் ஒரு பிரிவினர் சேலம் மாவட்டத்திலும் மற்றொரு பிரிவினர் மேடவாக்கம், செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியிலும் ஆய்வு மேற்கொண்டனர்.
அசுதோஷ் பிஸ்வாஸ், கல்பனா பர்வா ஆகியோர் மேடவாக்கம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் டெங்கு பாதித்து சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளை பார்த்தனர். அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை, அப்பகுதியில் மேற் கொள்ளப்பட்ட சுகாதார தடுப்பு பணிகள் குறித்து கேட்டறிந்தனர்.
அதனை தொடர்ந்து செங்கல்பட்டு அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ மனைக்கு சென்றனர். அங்கு டெங்கு வார்டில் சிகிச்சை பெறும் நோயாளிகளை பார்த்து விவரங்கள் கேட்டனர். டெங்குவினால் சிறு குழந்தைகள், சிறுவர்கள் அதிகளவு பாதிக்கப்பட்டு இருந்ததை பார்த்து குழுவினர் அதிர்ச்சி அடைந்தனர்.
மத்திய குழுவுடன் பொது சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் குழந்தைசாமி, மாநில நலவாழ்வு சங்க நிர்வாக இயக்குனர் தரிஷ் அகமது ஆகியோர் சென்றனர். செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிகளில் ஆய்வை முடித்து கொண்ட குழுவினர் அந்த பகுதியில் உள்ள கிராமங்களுக்கும் சென்றனர்.
இன்று இரவு புதுச்சேரி சென்றடையும் குழுவினர் நாளை அங்கு முழுமையாக ஆய்வுப் பணியில் ஈடுபடுகிறார்கள். மீண்டும் திங்கட்கிழமை இரவு சென்னை திரும்புகிறார்கள்.
இதுகுறித்து இயக்குனர் குழந்தை சாமி கூறியதாவது:-
டெங்கு பாதிப்புகளை கட்டுப்படுத்த அனைத்து மாவட்ட கலெக்டர்களும் 3 வாரத்திற்கு முழுமையாக ஈடுபட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதனால் அடுத்த வாரம் முதல் டெங்கு பாதிப்பு குறையும் என்று எதிர்பார்க்கிறோம் என்றார்.