செய்திகள்

எம்.பி.பி.எஸ். படிப்பு: ஜிப்மரில் 200 இடங்களுக்கு 2 லட்சம் பேர் போட்டி

புதுவை ஜிப்மர் மருத்துவ கல்லூரியில் எம்.பி.பி.எஸ். படிப்பிற்காக 200 இடங்களுக்கு மொத்தம் 1 லட்சத்து 89 ஆயிரத்து 700 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.

புதுச்சேரி:

புதுவையில் மத்திய அரசுக்கு சொந்தமான ஜிப்மர் மருத்துவ கல்லூரி உள்ளது. புதுவை கோரிமேட்டில் இதன் தலைமை கல்லூரியும், காரைக்காலில் கிளை கல்லூரியும் இயங்கி வருகிறது.

இரு கல்லூரிகளிலும் சேர்த்து 200 எம்.பி.பி.எஸ். இடங்கள் உள்ளன. இவற்றில் 54 இடங்கள் புதுவை மாநிலத்துக்கென தனியாக ஒதுக்கப்படுகிறது. மற்ற இடங்கள் அகில இந்திய அளவில் ஒதுக்கப்படுகிறது.

இவற்றுக்கு தனியாக நுழைவு தேர்வு நடத்தி மாணவர்களை தேர்வு செய்வது வழக்கம். இந்த ஆண்டுக்கான நுழைவு தேர்வு ஜூன் 4-ந் தேதி நடைபெறுகிறது.

இதற்காக மாணவர்களிடம் இருந்து ஆன்-லைன் மூலம் விண்ணப்பம் பெறப்பட்டது. விண்ணப்பம் பெறும் பணி கடந்த மார்ச் மாதம் 27-ந் தேதி தொடங்கியது. நேற்றுடன் விண்ணப்பம் பெறும் பணி முடிவடைந்தது. 200 இடங்களுக்கு மொத்தம் 1 லட்சத்து 89 ஆயிரத்து 700 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.

அதாவது ஒரு இடத்துக்கு 948 பேர் போட்டி போடுகிறார்கள். கடந்த ஆண்டை விட 52 ஆயிரத்து 262 மாணவர்கள் கூடுதலாக விண்ணப்பித்துள்ளனர்.

இவர்களுக்கு ஆன்-லைன் மூலமே ஹால் டிக்கெட் அனுப்பப்படும். அவற்றை இணைய தளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

அடுத்த மாதம் 4-ந் தேதி புதுவை, சென்னை உள்பட நாடு முழுவதும் 75 நகரங்களில் நுழைவு தேர்வு நடைபெறுகிறது. ஆன்-லைன் மூலமே தேர்வு எழுத வேண்டும். காலை 10 மணி முதல் 12.30 மணி வரை ஒரு பிரிவாகவும், பிற்பகல் 3 மணி முதல் 5.30 மணி வரை மற்றொரு பிரிவாகவும் நுழைவு தேர்வு நடைபெறும்.

SCROLL FOR NEXT