மாதா அமிர்தானந்தமயி 
செய்திகள்

பெண்களை போகப் பொருளாக பார்க்கும் எண்ணம் கூடாது- மாதா அமிர்தானந்தமயி பேச்சு

பெண்களை போகப் பொருளாக பார்ப்பதுடன், மரியாதை இல்லாமல் நடத்துவது முக்கியப் பிரச்சினையாக உள்ளது என்று மாதா அமிர்தானந்தமயி பேசியுள்ளார்.

மாலை மலர்

சென்னை:

சென்னை வேளச்சேரி குருநானக் கல்லூரியில் 11-வது இந்து ஆன்மிக மற்றும் சேவை கண்காட்சி நேற்று மாலை தொடங்கியது. இந்த நிகழ்ச்சிக்கு பண்பு மற்றும் கலாசார பயிற்சி முனைவு அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் ராஜலட்சுமி தலைமை தாங்கி, கருத்துரை வழங்கினார். வரவேற்பு குழு தலைவர் தங்கம் மேகநாதன் வரவேற்றார்.

நிர்வாக குழு தலைவர் பத்மா சுப்ரமணியம் கண்காட்சியில் நடந்த நிகழ்வுகள் குறித்து விளக்கினார். வரவேற்பு குழு செயலாளர் ஷீலா ராஜேந்திரா ஏற்புரை வழங்கினார்.

கண்காட்சியை மாதா அமிர்தானந்தமயி தொடங்கி வைத்து பேசியதாவது:-

பெண்மையைப் போற்றும் வகையில் நடைபெறும் இக்கண்காட்சியைத் தொடங்கி வைப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். 1,000 ஆண்டுகள் அந்நிய நாட்டு படையெடுப்பால் உடல், உள்ளம், பண்பாட்டு ரீதியாக பலம் இழந்தோம். தனித்தன்மையையும் இழந்தோம். குடும்ப உறவு, குடும்பச் சூழல் மாறியது. முன்பெல்லாம் தாயை தெய்வமாக எண்ணினார்கள். மேலைநாட்டு நாகரீகத்தால் நிலைமை தலைகீழாக மாறிவிட்டது.

பெண்களை போகப் பொருளாக பார்ப்பதுடன், மரியாதை இல்லாமல் நடத்துவது முக்கியப் பிரச்சினையாக உள்ளது. தாய்மையின் பெருமையை மறந்ததே இந்த நிலைக்கு காரணம். பெண் என்றால் சபலம் உடையவர். அபலை, வீரம் இல்லாதவர், புகலிடம் இல்லாதவர்கள் என்கின்றனர். ஆண்களுக்கு இணையாக பெண்களுக்கு இயற்கையாகவே திறன் உண்டு.

தாய்மை, பொறுமை, தற்காப்பு, சகிப்புத்தன்மை ஆகியவை பெண்களிடம் இயல்பாகவே உள்ள குணங்கள். அவர்கள் தானாகவே ஒளிவிடும் சூரியன் போன்றவர்கள். சிங்கத்தைப் போல கர்ஜிக்கும் பலமும், வீரமும் பெண்களுக்கு உண்டு. பெண்களின் கருணை, தாய்மை விலை மதிப்பற்றது. மாற்றத்தை ஏற்படுத்தும் மாபெரும் வல்லமை அவர்களுக்கு உள்ளது.

சில ஆண்களின் தீய நடத்தைகளால் மற்றவர்களுக்கும் கெட்ட பெயர் ஏற்படுகிறது. இந்த சூழலில் அரசியல், சமூக, பொருளாதாரப் பொறுப்புகளில் பெண்களின் பங்களிப்பு ஆறுதல் அளிக்கிறது.

பெண்களுக்கு வாய்ப்பும், சுதந்திரமும் அளித்தால் எல்லா தடைகளையும் தாண்டி சாதனை படைப்பார்கள். பாரத நாட்டின் பண்பாட்டை, கலாச்சாரத்தை மீட்டெடுப்பதில் பெண்களுக்கு மிகப்பெரிய பங்கு உள்ளது. அதற்கான வாய்ப்பு வசதிகளை ஆண்கள் ஏற்படுத்தித் தர வேண்டும்.

மரபணுக்களே ஒருவரது பழக்க, வழக்கங்களுக்கு காரணம் என்கின்றனர். வாழும் சூழலும், ஆன்மிகச் சூழலும் நற்பண்புகளை வளர்க்கும். நல்ல சூழலை குழந்தைகளுக்கு உருவாக்கிக் கொடுத்தால் கலாச்சாரம் வளரும். இதற்கு பெற்றோர் முன்மாதிரியாக இருக்க வேண்டும்.

முதலில் தாய்மையைப் பேணிக்காக்க பெண்கள் முன்வர வேண்டும். நற்பண்புகளை சிறுவயதில் இருந்தே பெற்றோர் ஊட்ட வேண்டும். அவ்வாறு வளர்த்தால், தவறு செய்யும் சூழல் ஏற்பட்டால் கூட ஆழ்மனதில் இருக்கும் நற்பண்புகள் தவறு செய்வதில் இருந்து தடுத்து விடும். பள்ளி, கல்லூரி, சமூகம் பாதிப்புகளை ஏற்படுத்தினாலும் தாய் வழியே கிடைக்கும் நற்பண்புகள் எந்தச் சூழலையும் எதிர் கொள்ளும் ஆற்றலை அந்த பிள்ளைகளுக்கு கொடுக்கும்.

செய்யும் வேலை, தொழில் காரணமாக மாற்றம் ஏற்படலாம். ஆனால், பெண்கள் எந்த சூழ்நிலையிலும் இயல்பை கைவிடக்கூடாது. அவ்வாறு இருந்தால் பெண்களுக்கு பெருமை இயற்கையாகவே கிடைக்கும். நாடு வளர்ந்து, விரிவடைய வேண்டுமானால் ஆன்மிகமும், உலகியல் வாழ்வும் அவசியம்.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் ‘துக்ளக்’ ஆசிரியர் குருமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பொதுமக்கள் இன்று (புதன்கிழமை) முதல் பிப்ரவரி 3-ந்தேதி வரை தினமும் காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை கண்காட்சியை பார்வையிடலாம். இதற்காக நூற்றுக்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.