மும்பை:
மராட்டிய மாநிலம் பாந்த்ரா ரெயில் நிலையம் அருகில் உள்ளது பெஹ்ரம்பாடா. இந்த பகுதியில் உள்ள குடிசைகளில் ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில், இன்று மாலை அங்குள்ள குடிசை பகுதியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. குடிசைகளில் பரவிய தீ மளமளவென அனைத்து குடிசைகளுக்கும் பரவியது. மேலும் ரெயில் நிலையத்தை இணைக்கும் நடைமேம்பாலம் தீ விபத்தில் சிக்கி சேதமானது.
தகவலறிந்து தீயணைப்பு படையினர் விரைந்து வந்தனர். ஆனால் தீயின் வேகம் கட்டுக்கடங்காமல் போனதால், மேலும் பல தீயணைப்பு வாகனங்களும், தண்ணீர் லாரிகளும் அங்கு விரைந்து வந்தன.
தீயணைப்பு வீரர்களுடன் போலீசாரும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். குடிசை பகுதிகளில் இருந்த மக்களை அங்கிருந்து அகற்றும் பணியில் ஈடுபட்டனர். தீ விபத்தை தொடர்ந்து, அந்த பகுதியில் போக்குவரத்து முற்றிலும் பாதிப்பு அடைந்தது.
இதுதொடர்பாக மேற்கு ரெயில்வே நிர்வாக அதிகாரிகள் கூறுகையில், பாந்த்ரா ரெயில் நிலையம் அருகே ஏற்பட்ட தீ விபத்தால் ரெயில் சேவையில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என தெரிவித்துள்ளனர்.