செய்திகள்

ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவர் மசூத் அசார் மிகவும் மோசமான நபர்: அமெரிக்கா கருத்து

பாகிஸ்தானை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவர் மசூத் அசார் மிகவும் மோசமான நபர் என அமெரிக்க வெளியுறவு துறையின் செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார்.

மாலை மலர்

வாஷிங்டன்:

பாகிஸ்தானை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவராக இருந்து வருபவர் மசூத் அசார்.

இந்தியாவில் பதான்கோட் விமானப்படை தளம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல்களுக்கு மூளையாக செயல்பட்ட இவரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்கக்கோரி ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலிடம் இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஆனால் சீனா இதற்கு தொடர்ந்து முட்டுக்கட்டையாக இருந்து வருகிறது.

கடந்த வாரம், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் பயங்கரவாதிகளை வகைப்படுத்தும் கமிட்டி கூடியபோது இந்தியா மீண்டும் இந்த கோரிக்கையை முன்வைத்தது. அமெரிக்கா, பிரான்ஸ், இங்கிலாந்து ஆகிய நாடுகள் இதற்கு ஆதரவு அளித்தன. ஆனாலும், மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்கும் தீர்மானத்துக்கு சீனா எதிர்ப்பு தெரிவித்ததால் அந்த தீர்மானம் நிறைவேறாமல் போனது.

இந்த நிலையில், அமெரிக்க வெளியுறவு துறையின் செய்தி தொடர்பாளர் ஹெதர் நவார்ட் வாஷிங்டன் நகரில் பத்திரிகையாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவரிடம் மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்கும் விவகாரத்தில் சீனாவின் நிலைப்பாடு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் பதில் அளித்து பேசுகையில், “மசூத் அசார் மிகவும் மோசமான நபர் என நாங்கள் நிச்சயமாக கருதுகிறோம். அவரை சர்வதேச பயங்கரவாதிகள் பட்டியலில் சேர்க்க வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம்” என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், அமெரிக்க சட்டத்தின் கீழ், மசூத் அசாரின் இயக்கத்தை சர்வதேச பயங்கரவாத இயக்கங்களின் பட்டியலில் சேர்ப்பது குறித்தும் ஆலோசித்து வருவதாக கூறினார். மேலும், மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்கும் தீர்மானத்துக்கு எதிராக வாக்களிப்பது ஏன் என்பதை சீனா தெளிவுபடுத்த வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.