சென்னை:
தேசத்தந்தை மகாத்மா காந்தியடிகளின் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இந்திய நாட்டின் விடுதலைக்காக பாடுபட்டு இன்னுயிரை ஈந்த சுதந்திர போராட்ட வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாகவும், அவர்களது தியாகத்தை நினைவுபடுத்தும் விதமாகவும் மகாத்மா காந்தியின் நினைவு தினம் தியாகிகள் தினமாக கடைபிடிக்கப்படுகிறது.
இதையொட்டி நாடு முழுவதிலும் உள்ள அவரது திருவுருவச் சிலைகள் மற்றும் திருவுருவப் படங்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படுகிறது. தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் காலை 11 மணிக்கு 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.
சென்னை காமராஜர் சாலை காமராஜர் சாலையில் உள்ள காந்தி சிலைக்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
அதன்பின்னர் தமிழக அரசின் சார்பில் காந்தியடிகளின் நினைவு நாளை முன்னிட்டு தீண்டாமை ஒழிப்பு உறுதி மொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உறுதி மொழியை வாசிக்க, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம், அமைச்சர்கள் மற்றும் ஊழியர்கள் உறுதிமொழி ஏற்றனர்.
தமிழகம் முழுவதும் அனைத்து பகுதிகளிலும் காலை 11 மணிக்கு போக்குவரத்து நிறுத்தப்பட்டு, 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. முதலமைச்சர் உட்பட அனைத்து வாகன ஓட்டிகளும் இந்த மவுன அஞ்சலியை கடைபிடித்தனர். #Martyrsday #tamilnews