செய்திகள்

இந்திய விமானப்படை முன்னாள் தளபதி அர்ஜன் சிங் கவலைக்கிடம்

இந்திய விமானப்படையின் முன்னாள் தளபதி அர்ஜன் சிங்கிற்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து, அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது.

இந்திய விமானப்படையின் தளபதியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர் அர்ஜன் சிங். 1965-ம் ஆண்டு இந்தியா- பாகிஸ்தான் இடையே போர் நடைபெற்றபோது விமானப்படைக்கு தலைமை தாங்கி சிறப்பாக வழி நடத்தியவர். 5 நட்சத்திரம் பெற்ற ஒரே விமானப்படை தளபதி என்ற பெருமையை பெற்றவர்.

தற்போது 98 வயது ஆகும் அர்ஜன் சிங்கிற்கு இன்று காலை திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. உடனடியாக டெல்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதுபற்றி தகவல் அறிந்த பிரதமர் மோடி, பாதுகாப்புத்துறை மந்திரி நிர்மலா சீதாராமன் ஆகியோர் மருத்துவமனைக்கு விரைந்தனர். அங்கு அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து கேட்டறிந்தனர். அவரது குடும்ப உறுப்பினர்களை சந்தித்தும் விசாரித்தனர்.