தர்மபுரி:
தர்மபுரி மாவட்டம் இண்டூர் அருகே உள்ள கொல்லஅள்ளி பகுதியை சேர்ந்த ராஜுவின் மகன் சக்திவேல் (வயது 23). இவர் கடந்த 7 ஆண்டுகளாக கோவையில் தங்கி இருந்து பெட்டிக்கடை நடத்தி வந்தார். இவருக்கும் தர்மபுரி மாவட்டம் பென்னாகரத்தை அடுத்த கொடியூர் பகுதியை சேர்ந்த பெண்ணுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது.
கடந்த 22-ந்தேதி திருமணம் நடைபெறுவதாக இருந்தது. இந்த நிலையில் கோவை புலியகுளத்தில் நடந்த அடிதடி தகராறில் போலீசார் இவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதை அறிந்த மணமகள் வீட்டார் திருமணத்தை பிப்ரவரி 5-ந் தேதிக்கு தள்ளிவைத்தனர். ஜாமீனில் வெளியே வந்த இவர். ராஜா கொல்லஅள்ளியில் தங்கி இருந்தார்.
ஜெயிலுக்கு சென்று வந்தவருக்கு பெண் கொடுப்பதா என்று மணமகள் வீட்டாரிடம் உறவினர்கள் கேட்டனர். இதனால் குழப்பமான சூழ்நிலை நிலவியது. 5-ந்தேதியும் திருமணம் நடக்குமா? என்பதில் சக்திவேலுக்கு சந்தேகம் ஏற்பட்டது.
மனம் உடைந்த அவர் நேற்று அதே பகுதியில் முருகன் கோவில்அருகே உள்ள மரத்தில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து இண்டூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். #tamilnews