நாகர்கோவில்:
குளச்சல் அருகே பழைய கடையைச் சேர்ந்த 17 வயது இளம்பெண் ஒருவர் நாகர்கோவிலில் உள்ள கல்லூரி ஒன்றில் முதலாமாண்டு படித்து வரு கிறார்.
இவருக்கும், கல்லூக்கூட்டம் வெள்ளங்கட்டி தெருவைச் சேர்ந்த மதன்குமார் என்பவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. கடந்த 2 ஆண்டுகளாக இருவரும் காதலித்து வந்தனர். காதல் விவகாரம் கல்லூரி மாணவியின் பெற்றோருக்கு தெரிய வந்தது.
இதையடுத்து அவரை கண்டித்தனர். பெற்றோர் கண்டித்த விவரத்தை கல்லூரி மாணவி, தனது காதலன் மதன்குமாரிடம் கூறினார். நான் உன்னை திருமணம் செய்து கொள்வேன் என்று ஆசை வார்த்தைகளை கூறினார். அவரை பல்வேறு இடங்களுக்கும் அழைத்துச் சென்றார்.
அப்போது கல்லூரி மாணவியுடன் மதன்குமார் உல்லாசம் அனுபவித்தார். பலமுறை கட்டாயப்படுத்தி மாணவியிடம் உடலுறவு கொண்டார். இது குறித்து அந்த மாணவி, தனது பெற்றோரிடம் கூறினார். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த மாணவியின் பெற்றோர் அவரை கண்டித்தனர்.
பின்னர் நடந்த சம்பவத்தை குளச்சல் மகளிர் போலீசில் தெரிவித்தனர். கல்லூரி மாணவி கொடுத்த புகாரின்பேரில், இன்ஸ்பெக்டர் பிரேமா வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டார். மதன்குமார் மீது இந்திய தண்டனைச் சட்டம் 4, 6, 366(ஏ), 343 ஐபிசி மற்றும் போஸ்கோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இதையடுத்து போலீசார் மதன்குமாரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அவர், கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டார். கல்லூரி மாணவியை மருத்துவ பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு மருத்துவ பரிசோதனை நடக்கிறது.