மரக்காணம்:
சென்னை ஆதம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் அப்துல் காதர் (வயது 30), வேளச்சேரியை சேர்ந்தவர் சுரேஷ் (27). இவர்கள் 2 பேரும் ஒரே மொபட்டில் சென்னையில் இருந்து புதுவைக்கு இன்று வந்து கொண்டிருந்தனர்.
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே கூனிமேடு பஸ் நிறுத்தம் பகுதியில் சென்ற போது புதுவையில் இருந்து சென்னைநோக்கி வந்த கார் திடீரென்று மொபட்மீது பயங்கரமாக மோதியது.
இந்த விபத்தில் 2 பேரும் தூக்கி வீசப்பட்டனர். சிறிது நேரத்தில் அப்துல் காதர், சுரேஷ் ஆகியோர் சம்பவ இடத்தில் பலியானார்கள்.
தகவல் அறிந்த மரக்காணம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்விநாயகம் தலைமையிலான போலீசார் விரைந்தனர். பலியான 2 பேரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மரக்காணம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்து குறித்து பலியான 2பேரின் உறவினர்களுக்கு தெரிவிக்கப்பட்டு உள்ளது. அவர்கள் மரக்காணம் விரைந்த வண்ணம் உள்ளனர்.