விருதுநகர்:
கொரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில் விருதுநகர் மாவட்டத்தில் நகராட்சி பகுதியில் உள்ள பட்டாசு ஆலைகள் செயல்பட தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஆனால் கிராமப்புற பகுதிகளில் உள்ள பட்டாசு ஆலைகள் விதிமுறைகளுக்கு உட்பட்டு செயல்படலாம் என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
ஆனால் கட்டுப்பாடுகள் கடுமையாக உள்ளன. 50 சதவீத ஊழியர்களை கொண்டுதான் பட்டாசு ஆலைகள் இயங்க வேண்டும். ஊழியர்களை வாகனங்களில் சமூக இடைவெளியை கடைப்பிடித்து அழைத்துவர வேண்டும்.
3 மணி நேரத்திற்கு ஒரு முறை பட்டாசு ஆலை வளாகத்தில் கிருமி நாசினி தெளிக்க வேண்டும். கழிவறைகளை ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை சுத்தம் செய்ய வேண்டும். விதிமுறைகளை தொழிலாளர்களுக்கு தெரியும் வகையில் எழுதி வைக்க வேண்டும். பட்டாசு ஆலைகள் செயல்படுவதற்கான அனுமதியை தனி தாசில்தாரிடம் பெற வேண்டும். இவையே மாவட்ட நிர்வாகம் விதித்துள்ள கட்டுப்பாடுகள் ஆகும்.
இதுகுறித்து சிறு பட்டாசு ஆலை உரிமையாளர்கள் கூறும்போது, இன்று முதல் பட்டாசு ஆலைகள் செயல்பட மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கி உள்ளது. ஆனால் விதிக்கப்பட்டுள்ள நிபந்தனைகள் அனைத்தும் கடுமையாக உள்ளன. அவற்றை கடைப்பிடிப்பது என்பது இயலாத காரியம்.
எனவே தற்போது பட்டாசு ஆலைகள் செயல்பட வாய்ப்பு இல்லை. தடை உத்தரவை முழுமையாக விலக்கி கொண்டால்தான் பட்டாசு ஆலைகள் முழுமையாக செயல்பட முடியும் என்றனர்.