செய்திகள்

தேசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்: சாம்பியன் பட்டம் வென்றார் மனோஜ்குமார்

தேசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் மனோஜ்குமார் 69 கிலோ எடைப்பிரிவில் தங்கப்பதக்கம் வென்றார்

மாலை மலர்

தேசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டிகள் ஆந்திரப்பிரதேச மாநிலம் விசாகப்பட்டிணத்தில் நடைபெற்றது.

இதில் ஆண்களுக்கான 69 கிலோ உடல் எடைப்பிரிவின் இறுதிப்போட்டியில் கடந்த ஆண்டு சாம்பியனான மனோஜ்குமார் (ரயில்வே விளையாட்டு மேம்பாட்டு வாரியம்), துரியோதன் சிங்கை ( சர்விசஸ் விளையாட்டு கட்டுப்பாடு வாரியம்) எதிர்கொண்டார். இப்போட்டியில் மனோஜ்குமார் 4-1 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்று தொடர்ந்து இரண்டாவது முறையாக தங்கப்பதக்கத்தை தட்டிச்சென்றார்.

49 கிலோ எடைப்பிரிவில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் ஷியாம் குமாரும், லால்பைகிமா (மிஸோரம்) ஆகியோர் மோதினர். இதில் 3-2 என்ற புள்ளிக்கணக்கில் ஷியாம் குமார் வெற்றி பெற்றார். 52 கிலோ எடைப்பிரிவில் சல்மான் ஷேக் தங்கம் வென்றார்.

60 கிலோ எடைப்பிரிவில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் கடந்த ஆண்டு சாம்பியனான ஷிவதபா, சர்விசஸ் விளையாட்டு கட்டுப்பாடு வாரிய அணியின் மணீஷ் கவுஷிக்கை எதிர்கொண்டார். இதில் மணீஷ் கவுஷிக் வெற்றி பெற்றார்.

75 கிலோ எடைபிரிவில் காமன்வெல்த் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற மன்தீப் ஜங்ரா தங்கப்பதக்கத்தை தட்டிச்சென்றார். அவர் மிஸோரம் அணியின் வன்ஹிலிம்புயாவை எதிர்த்து விளையாடினார். 91 கிலோ எடைப்பிரிவில் அரியானாவின் நமன் தங்கப்பதக்கம் வென்றார்.

91 கிலோவிற்கு அதிகமானோருக்கான எடைப்பிரிவில் ஆசிய போட்டிகளில் வெண்கலம் வென்ற சதீஷ் தங்கப்பதக்கத்தை தட்டிச்சென்றார். 56 கிலோ எடைப்பிரிவில் சர்விசஸ் விளையாட்டு கட்டுப்பாடு வாரிய அணியின் மதன்லால் தங்கப்பதக்கம் வென்றார்.