மன்னார்குடி:
மன்னார்குடி அருகே பாலையூர் தெற்கு தெருவை சேர்ந்தவர் காளிமுத்து மகன் குபேந்திரன் (வயது 45), விவசாயி. இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். இவர் தனக்கு சொந்தமான நிலத்தில் விவசாயம் செய்து வருகிறார். இவர் தனது வீட்டின் வெளிப்புறத்தில் உள்ள அறையில் தூங்குவதை வழக்கமாக கொண்டிருந்தார்.
அதேபோல் நேற்று வேலை முடிந்து வீட்டிற்கு வந்த குபேந்திரன் இரவு வழக்கம்போல் தன்னுடைய அறைக்கு சென்று தூங்கியுள்ளார். இந்நிலையில் இன்று காலை நீண்ட நேரமாகியும் அவரது அறை திறக்கப்படாமல் இருந்துள்ளது.
இதனால் சந்தேகம் அடைந்த அவரது தந்தை காளிமுத்து, குபேந்திரன் தூங்கிக்கொண்டிருந்த அறையின் கதவை திறந்து பார்த்தபோது உடலில் பல இடங்களில் சரமாரியாக வெட்டப்பட்ட நிலையில் குபேந்திரன் ரத்தவெள்ளத்தில் பிணமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த பெருகவாழ்ந்தான் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து கொலை செய்யப்பட்ட குபேந்திரனின் உடலை பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். அதனை தொடர்ந்து மோப்பநாய் வரவழைக்கப்பட்டு துப்பு துலக்கப்பட்டது.
முன்விரோதம் காரணமாக குபேந்திரன் கொலை செய்யப்பட்டுள்ளாரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை மேற்கொண்டுள்ளனர்.