மன்னார்குடி:
பட்டுக்கோட்டையில் இருந்து இன்று காலை புறப்பட்ட தனியார் பஸ் மன்னார்குடி அருகே சென்று கொண்டிருந்தது. இந்த பஸ்சில் மாணவ- மாணவிகள், பெண்கள் உள்பட சுமார் 40 பயணிகள் இருந்தனர்.
பஸ் கீழநாகை சென்றபோது முன்னாள் சென்ற பஸ்சை தனியார் பஸ் டிரைவர் முந்தி செல்ல முயன்றதாக கூறப்படுகிறது. அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் சாலையோரம் இருந்த பஸ் நிறுத்த சுவரில் வேகமாக மோதியது. எதிர்பாராதவிதமாக பஸ் சுவரில் மோதியதை கண்ட பயணிகள் அச்சத்தில் அலறினர். இந்த விபத்தில் பஸ்சில் இருந்த காவியா, பிரியதர்ஷினி, ராஜூ ஆகிய 3 மாணவிகள் உட்பட 8 பெண்கள் படுகாயமடைந்தனர். மேலும் 20 பயணிகளுக்கு லேசான காயம் ஏற்பட்டது.
தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த பரவாக்கோட்டை போலீசார் காயமடைந்த 8 பேரையும் உடனடியாக மீட்டு மன்னார்குடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.