திருவொற்றியூர்:
சென்னை எண்ணூர் சத்யமூர்த்திநகர் முதல் தெருவைச் சேர்ந்தவர் ரமணி(வயது 35). இவர், ராயபுரம் எம்.சி.ரோட்டில் உள்ள துணிக்கடையில் வேலை பார்த்து வருகிறார். இவரது தோழி ரேவதி(33).
நேற்று முன்தினம் மாலை இவர்கள் இருவரும் வேலை முடிந்து மொட்டில் வீட்டுக்கு சென்றுகொண்டிருந்தனர். மொபட்டை ரமணி ஓட்டினார். அவருக்கு பின்னால் ரேவதி அமர்ந்து இருந்தார்.
எண்ணூர் தீயணைப்பு நிலையம் அருகே இவர்கள் சென்று கொண்டிருந்தனர். அப்போது எங்கிருந்தோ காற்றில் பறந்துவந்த காற்றாடி மாஞ்சாநூல் மொபட்டை ஓட்டிவந்த ரமணியின் கழுத்தை அறுத்தது.
இதில் நிலைதடுமாறிய அவர் மொபட்டுடன் கீழே விழுந்தார். இதில் பின்னால் அமர்ந்து வந்த ரேவதியும் கீழே விழுந்தார். இதில் அவரது கையில் எலும்பு முறிந்தது. படுகாயம் அடைந்த ரமணி, ரேவதி இருவரும் ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதுபற்றி எண்ணூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மேலும் இந்த சம்பவத்தை தொடர்ந்து எண்ணூர், சாத்தாங்காடு, மணலி ஆகிய பகுதிகளில் காற்றாடி, மாஞ்சாநூல் விற்றது தொடர்பாக 28 பேர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.