மணிமுத்தாறு அணை 
செய்திகள்

மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 111 அடியாக உயர்வு

மணிமுத்தாறு அணை நீர்மட்டம் இன்று மேலும் ஒரு அடி உயர்ந்து 111.30 அடியாக உள்ளது. அணை நிரம்ப இன்னும் 6 அடி தண்ணீர் மட்டுமே தேவை.

மாலை மலர்

நெல்லை:

தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது. குறிப்பாக நெல்லை, தென்காசி மாவட்டங்களில் இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை இயல்பான அளவை விட அதிக அளவில் பெய்துள்ளது. இந்த நிலையில் வடகிழக்கு பருவமழை முடிந்த பிறகும் அவ்வப்போது நெல்லை, தென்காசி மாவட்டங்களில் மிதமான மழை பெய்து வருகிறது. நேற்று மாலை நெல்லை, தென்காசி மாவட்டங்களில் சில இடங்களில் சாரல் மழை பெய்தது.

இன்று காலை நிலவரப்படி பாபநாசம் மற்றும் சேர்வலாறு அணை பகுதிகளில் அதிகபட்சமாக 20 மில்லி மீட்டரும், மணிமுத்தாறு அணை பகுதியில் 11.8 மில்லி மீட்டரும் மழை பெய்துள்ளது.

மழை காரணமாக பாபநாசம் அணை கடந்த சில நாட்களாக நிரம்பிய நிலையில் காட்சியளிக்கிறது. நேற்று அணைக்கு 1,476 கன அடி நீர் வந்து கொண்டிருந்த நிலையில் மாலை நேரத்தில் பெய்த மழை காரணமாக அணைக்கு நீர் வரத்து அதிகரித்தது. இன்று காலை அணைக்கு 2,103 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து வினாடிக்கு 1,959 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. அணை நீர்மட்டம் தொடர்ந்து 142.50 அடியாக நிரம்பிய நிலையில் உள்ளது. சேர்வலாறு அணை நீர் மட்டமும் முழு கொள்ளளவை எட்டி இன்று 155.48 அடியாக நீர்மட்டம் உள்ளது. அணையில் இருந்து நீர் வெளியேற்றப்படவில்லை.

மணிமுத்தாறு அணைக்கு இன்று காலை வினாடிக்கு 746 கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. அணையில் இருந்து வினாடிக்கு 315 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. நேற்று அணையின் நீர்மட்டம் 110.90 அடியாக இருந்தது. இந்நிலையில் இன்று மேலும் ஒரு அடி உயர்ந்து 111.30 அடியாக உள்ளது. அணை நிரம்ப இன்னும் 6 அடி தண்ணீர் மட்டுமே தேவை.

இன்று காலை வடக்கு பச்சையாறு அணை நீர்மட்டம் 43 அடியாகவும், நம்பியாறு அணை நீர்மட்டம் 18.72 அடியாகவும், கொடுமுடியாறு அணை நீர்மட்டம் 40 அடியாகவும் உள்ளது. இன்று காலை நிரம்பிய அணைகளான கடனாநதியில் 84 அடியும், ராமநதியில் 83.50 அடியும், கருப்பாநதியில் 70.21 அடியும், குண்டாறு அணையில் 36.10 அடியும், அடவிநயினார் அணையில் 128.25 அடியும் நீர்மட்டம் உள்ளது.

நெல்லை, தென்காசி மாவட்டங்களில் இன்று காலை வரை பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

பாபநாசம், சேர்வலாறு-20, மணிமுத்தாறு-12, சேரன்மகாதேவி, ராமநதி-8, அம்பை-5, ஆய்குடி-4.60, தென்காசி-3.10, கருப்பா நதி-2.5, கடனா நதி-2.