பூந்தமல்லி:
மாங்காட்டை அடுத்த கொளம்பாக்கம் காந்தி தெருவைச் சேர்ந்தவர் தினேஷ் (21). கார் டிரைவர்.
கடந்த 2-ந்தேதி கொளப்பாக்கத்தில் நடந்த ஒரு திருமண நிகழ்ச்சியில் தினேஷ் கலந்து கொண்டார். நிகழ்ச்சி முடிந்ததும் வீட்டுக்கு செல்வதற்காக புறப்பட்டார்.
அப்போது அங்கு வந்த 2 பேர் அவரிடம் தகராறு செய்தனர். திடீரென்று அரிவாளால் வெட்டி விட்டு தப்பி ஓடி விட்டனர். கழுத்தில் பலத்த காயத்துடன் சென்னை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட தினேஷ் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து மாங்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். சம்பவம் நடந்த பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது ஒரு இருட்டான பகுதியில் நின்று கொண்டிருந்த தினேசை மோட்டார்சைக்கிளில் வந்த 2 பேர் வெட்டி விட்டு தப்பியது தெரிய வந்தது.
இதை வைத்து விசாரித்த போது நெற்குன்றத்தைச் சேர்ந்த பிரசன்னநாத் (19), உதயசந்திரன் ஆகியோர் இந்த கொலையை செய்தது துப்பு துலங்கியது. அவர்களை போலீசார் கைது செய்தனர்.
கொலை செய்தது ஏன் என்பது குறித்து போலீசார் விசாரித்தபோது வெளியான தகவல் வருமாறு:-
பிரசன்னநாத்துக்கும் தியாகு என்பவருக்கும் முன் விரோதம் இருந்து வந்தது. தியாகு கொளப்பாக்கத்தில் நடந்த திருமண நிகழ்ச்சிக்கு சென்று இருப்பது தெரிய வந்தது.
அவரை கொலை செய்வதற்காக பிரசன்னநாத் பெருங்களத்தூரைச் சேர்ந்த தனது நண்பர் உதயசந்திரனையும் உடன் அழைத்துச் சென்றார்.
திருமண நிகழ்ச்சி நடந்த பகுதியில் டிரைவர் தினேஷ் நின்று கொண்டிருந்தார். இருட்டான இடம் என்பதால் அவர் தியாகு என்று நினைத்து அவரை வம்புக்கு இழுத்து அரிவாளால் வெட்டி விட்டு தப்பிச் சென்றனர்.
ஆள்மாறாட்டத்தில் அப்பாவி டிரைவர் தினேஷ் கொல்லப்பட்டுள்ளார். இந்த சம்பவம் மாங்காடு பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.