புதுடெல்லி:
டெல்லியில் உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் தலைமையில் நடைபெற்ற மந்திரிகள் கூட்டத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேலாண்மை மந்திரி மேனகா காந்தி கஞ்சாவை மருத்துவ காரணங்களுக்கு பயன்படுத்த அனுமதி கேட்டு சட்ட முன்வரைவு ஒன்றை வெளியிட்டார்.
அதை ஆய்வு செய்த மந்திரிகள் குழு சிறிய மாற்றங்களை செய்து மருத்துவ சிகிச்சைக்காக கஞ்சாவை மருந்து வடிவில் பயன்படுத்த ஒப்புதல் வழங்கியது.
இதுகுறித்து, மேனகா காந்தி கூறுகையில், அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளில் கஞ்சா பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதே வரிசையில் இந்தியாவிலும் கஞ்சாவை மருத்துவ சிகிச்சைக்காக பயன்படுத்த அனுமதிக்க வேண்டும். குறிப்பாக புற்றுநோய் குணப்படுத்துவதில் கஞ்சா முக்கிய பங்கு வகிக்கிறது என்றார்.
நாடு தழுவிய அளவில் போதைப்பொருள் பயன்பாடு தொடர்பாக எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில் ரெயில் நிலையங்களுக்கு அருகில் வாழும் குழந்தைகள் அதிக அளவில் போதைப்பொருள் பயன்படுத்துவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் அப்பகுதியில் அதிக அளவில் போதை மீட்பு மையங்கள் அமைக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.