செய்திகள்

பள்ளி பேருந்துகளில் ஓட்டுநர்கள், நடத்துனர்களாக பெண்களை நியமிக்க வேண்டும்: மத்திய மந்திரி மேனகா காந்தி

பள்ளி பேருந்துகளில் ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்களாக பெண்களை நியமனம் செய்ய வேண்டும் என மத்திய மந்திரி மேனகா காந்தி தெரிவித்துள்ளார்.

மாலை மலர்

ஐதராபாத்:

இந்தியாவில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் குறித்து தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. இருந்தாலும், ஆங்காங்கே பாலியல் வன்கொடுமைகளால் சிறுவர்கள் பாதிக்கப்படுகின்றனர். குறிப்பாக பள்ளி மாணவர்கள் பாலியல் சீண்டலுக்கு ஆளாகி வருகின்றனர். சமீபத்தில்கூட டெல்லி அருகே பள்ளி வளாகத்தில் ஒரு மாணவன்

கொல்லப்பட்டான்.

இந்த சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ள நிலையில், மாணவர்களின் பாதுகாப்பு தொடர்பாக பள்ளிகள் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து சிபிஎஸ்இ நேற்று அனைத்து பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பியது.

அதில், பள்ளி வளாகங்களின் முக்கிய இடங்களில் கண்காணிப்பு கேமராக்களை கண்டிப்பாக பொருத்த வேண்டும். பள்ளி பணியாளர்கள் பற்றிய விவரங்களை காவல்துறை மூலம் சரிபார்க்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தி இருந்தனர்.

இந்நிலையில், ஐதராபாத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பெண்கள் மற்றும் குழந்தைகள் நல மேம்பாட்டு துறை மந்திரி மேனகா காந்தி பேசுகையில், பள்ளி பேருந்துகளில் ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்களாக பெண்களை நியமனம் செய்யலாம் என பரிந்துரை செய்துள்ளார்.

இதுகுறித்து மேனகா காந்தி பேசுகையில், அனைத்து பள்ளி பேருந்துகளிலும் ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்களாக பெண்களை மட்டுமே நியமிக்க வேண்டும். இதற்காக பெண்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும். ஓட்டுநர்கள், நடத்துனர்கள் மற்றும் உதவியாளர்களாக பெண்களுக்கு பயிற்சி அளிக்க நிர்பயா நிதியை பயன்படுத்தலாம் என தெரிவித்துள்ளார்.