செய்திகள்

மக்களுக்கு சேவை செய்வேன், ஒரு குடும்பத்துக்கு அல்ல: நிதிஷ்குமார் காட்டம்

மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்பதே உத்தரவு, ஒரு குடும்பத்துக்கு அல்ல என்று நம்பிக்கை வாக்கெடுப்புக்கு பிறகு பீகார் முதல்வர் நிதிஷ்குமார் காட்டமாக பேசினார்.

மாலை மலர்

பாட்னா:

பா.ஜ.க. ஆதரவுடன் மீண்டும் பீகார் மாநில முதல்-மந்திரியாக நிதிஷ்குமார் நேற்று முன்தினம் பதவியேற்றுக் கொண்டார். இதனையடுத்து, நேற்று பீகார் சட்டசபையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பிலும் அவர் வெற்றி பெற்றார்.

நம்பிக்கை வாக்கெடுப்புக்கு பின் நிதிஷ்குமார் பேசியதாவது:-

மதச்சார்பின்மை ஒரு கொள்கையாக இருக்க வேண்டும், ஊழலை மறைக்கக் கூடியதாக இருக்கக் கூடாது. மதச்சார்பின்மையை எனக்கு போதிக்கக் கூடாது. தற்போது நாட்டில் உள்ள நிலைமை எனக்கு நன்றாக தெரியும். எனக்கு எதிராக பேசுபவர்களுக்கு முன்னாடி நான் ஒரு கண்ணாடியை காண்பிப்பேன்.

மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்பதே உத்தரவு, ஒரு குடும்பத்துக்கு அல்ல. மக்கள் நீதிமன்றம் மிகப்பெரிய நீதிமன்றம். மக்களுக்கு சேவை செய்வதே எனது கடமை. என்னால் இரு குடும்பத்துக்கு சேவை செய்ய முடியாது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

பா.ஜ.க.வுடன் இணைந்து நிதிஷ்குமார் ஆட்சி அமைத்ததன் மூலம் அவர் வாக்களித்த பீகார் மக்களுக்கு துரோகம் செய்து விட்டதாக லாலு குற்றம்சாட்டி இருந்தது குறிப்பிடத்தக்கது.