மணப்பாறை:
பால் உற்பத்தியாளர்களை பாதுகாக்கக்கோரி தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் மணப்பாறை பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் முன்பு போராட்டம் நடந்தது. போராட்டத்துக்கு சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் முகமதுஅலி தலைமை தாங்கினார். போராட்டத்தின் போது, அனைத்து நாட்களும் உற்பத்தியாளர்களிடம் பாலை கொள்முதல் செய்யவேண்டும்.
மேலும் 50 சதவீத மானியத்தில் தீவனம் வழங்க வேண்டும். சத்துணவு திட்டத்தில் பாலை சேர்க்க வேண்டும். பால் கூட்டுறவு ஆரம்ப சங்கங்களுக்கு நிலுவைத் தொகையை உடனே வழங்கவேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. அப்போது பெண்கள், திடீரென பாலை சாலையில் கொட்டி, கோஷம் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதில் சுமார் 50-க்கும் மேற்பட்ட பால் உற்பத்தியாளர்கள் சமூக இடைவெளியுடன் கலந்து கொண்டனர்.