செய்திகள்

ஒருதலைக் காதலால் இளம் பெண்ணை சுட்டுக் கொன்று தற்கொலைக்கு முயன்ற வாலிபர்

உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் இன்று அதிகாலை வாலிபர் ஒருவர் இளம் பெண்ணை துப்பாக்கியால் சுட்டு தானும் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப்பிரதேசம் மாநிலம் ஜான்சி மாவட்டத்தைச் சேர்ந்தவர் ரோஹித் குஷ்வாகா. இவர் அப்பகுதியைச் சேர்ந்த சுனந்தா வர்மா என்ற பெண்ணை ஒரு தலையாக காதலித்து வந்தார். ஆனால் சுனந்தா அவரின் காதலுக்கு மறுப்பு தெரிவித்தார்.


இந்நிலையில், இன்று அதிகாலை சுனந்தா தண்ணீர் எடுப்பதற்காக வீட்டிற்கு வெளியே வந்துள்ளார். அப்போது அங்கு வந்த ரோஹித் சுனந்தாவை நோக்கி துப்பாக்கியால் சுட்டார். இதில் படுகாயமடைந்த சுனந்தா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். சுனந்தாவை சுட்ட பின் ரோஹித் தன்னையும் சுட்டார்.

துப்பாக்கி சத்தம் கேட்டு வெளியே வந்த சுனந்தா வீட்டில் உள்ளவர்கள் அவர் இறந்து கிடப்பதை கண்டு போலீசாருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு உடனே வந்த போலீசார் சுனந்தாவின் உடலை மீட்டனர். மேலும், மயக்கமடைந்து கிடந்த ரோஹித்தை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.