புதுடெல்லி:
டெல்லியில் உள்ள லால் குய்லா மெட்ரோ ரெயில்வே ஸ்டேஷனில் பல்வேறு பகுதிகளுக்கு செல்ல பயணிகள் இன்று காத்துக் கொண்டிருந்தனர். அப்போது பயணிகள் உடமைகளை எக்ஸ்ரே இயந்திரத்தில் வைத்து சி.ஐ.எஸ்.எப். அதிகாரிகள் சோதனை செய்தனர்.
அவற்றில் ஒரு பையில் இருந்து எச்சரிக்கை ஒலி எழுப்பி ஸ்கேனிங் இயந்திரம் காட்டிக் கொடுத்தது. அந்த பையை எடுத்து, அதிகாரிகள் சோதனை செய்தனர். அதில் துப்பாக்கி குண்டுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து, போலீசார் சம்பந்தப்பட்ட பையின் உரிமையாளரை விசாரித்தனர். விசாரணையில் அவர் உ.பி.யின் மதுராவை சேர்ந்த சோனு என தெரியவந்தது.
அவரிடம் வைத்திருந்த துப்பாக்கி குண்டுகளுக்கு உரிய அனுமதி இல்லாததால், சி.எஸ்.ஐ.எப். அதிகாரிகள் துப்பாக்கி குண்டுகளை பறிமுதல் செய்தனர். அதன்பின்னர் அவரை டெல்லி போலீசிடம் ஒப்படைத்தனர். டெல்லி போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.