புதுடெல்லி:
தலைநகர் புதுடெல்லியின் லஜ்பட் நகரில் உள்ளது லோக் நாயக் ஜெய் பிரகாஷ் நாராயண் அரசு மருத்துவமனை. இந்த மருத்துவமனையில் பாதாள சாக்கடையை தூய்மை செய்யும் பணிகள் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 4 தொழிலாளிகள் இந்த பணிகளில் ஈடுபட்டனர்.
சாக்கடை சுத்தம் செய்யும் பணியின் போது 4 தொழிலாளர்களும் விஷவாயு தாக்கி மயக்கமடைந்தனர். இதில் 48 வயதுடைய துப்பரவு தொழிலாளர் ஒருவர் உயிரிழந்தார். மேலும் 2 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
துப்பரவு பணியானது பொதுப் பணித் துறை மூலம் தனியார் ஒப்பந்ததாரருக்கு வழங்கப்பட்டு இருந்தது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், துப்பாரவு தொழிலாளி உயிரிழந்த விவகாரம் தொடர்பாக மருத்துவமனையில் மருந்து கிடங்கு பாதுவாலராக பணி புரியும் பிரேம் சாகர் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரது அலட்சியம் காரணமாக உயிரிழப்பு நிகழ்ந்ததாக போலீசார் தரப்பில் கூறப்பட்டுள்ளது.