செய்திகள்

கோவில் திருவிழா ஊர்வலத்தில் யானை மிதித்து பாகன் பலி

அருமனை அருகே கோவில் விழாவில் யானை பாகனை மிதித்துக் கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மாலை மலர்

அருமனை:

அருமனை அருகே உள்ள பனச்சமூடு வெள்ளச்சிப்பாறை என்ற இடத்தில் பத்ரகாளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கடந்த 3 நாட்களாக திருவிழா நடந்து வந்தது.

இதையொட்டி நேற்று இரவு அம்மன் ஊர்வலம் நடந்தது. இந்த ஊர்வலத்தில் கேரள மாநிலத்தில் இருந்து வரவழைக்கப்பட்ட அம்முக்குட்டி என்ற பெண் யானையும் பங்கேற்றது. இந்த யானையின் பாகனாக திருச்சூர் கைத்தக்கல் என்ற இடத்தைச் சேர்ந்த சமீர் (25) என்பவர் இருந்தார்.

அம்மன் ஊர்வலத்தின் முன்பாக யானை செல்ல, அதனை தொடர்ந்து பக்தர்கள் அணிவகுத்துச் சென்றனர். ஊர்வலம் கோவிலை அடைந்ததும் யானையை கேரளாவுக்கு கொண்டு செல்வதற்கான ஏற்பாடுகளில் பாகன் சமீர் ஈடுபட்டு இருந்தார். அப்போது திடீரென யானை மிரண்டு அங்கும், இங்கும் ஓடியது.

இதை கண்டு கோவிலில் கூடியிருந்த பக்தர்கள் நாலாபுறமும் சிதறி ஓடினர். யானையை கட்டுப்படுத்த பாகன் சமீர் முயற்சித்தார். அப்போது ஆவேசம் அடைந்த யானை, சமீரை தூக்கி வீசி காலால் மிதித்தது. இதில் சமீர் படுகாயம் அடைந்தார். அவரை அங்குள்ளவர்கள் மீட்டு நெய்யாற்றின்கரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் பாகன் சமீர் பரிதாபமாக இறந்தார்.

கோவிலில் பக்தர்களை மிரட்டிய படி நின்ற யானையை, அதன் உரிமையாளர் கட்டுக்குள் கொண்டு வந்தார். பின்னர் யானையும் கேரளாவுக்கு கொண்டு செல்லப்பட்டது.

கோவில் விழாவில் பாகனை மிதித்துக் கொன்ற சம்பவம் அருமனை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  #tamilnews