செய்திகள்

பஞ்சாப் பாடகரை துப்பாக்கியால் சுட்ட ஆசாமி கைது

பஞ்சாப்பில் வசித்து வரும் பாப் பாடகர் பர்மிஷ் வர்மாவை துப்பாக்கியால் சுட்டவரை போலீசார் இன்று கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

சிம்லா:

பஞ்சாப் மாநிலத்தில் பிரபல பாப் பாடகராக இருந்து வருபவர் பர்மிஷ் வர்மா, இவர் தனது நண்பர் குல்வந்த் சிங்குடன் மொஹாலியில் ஒரு விருந்து நிகழ்ச்சியில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று இரவு பங்கேற்றார்.

நள்ளிரவில் அவர்கள் காரில் வீடு திரும்பினர். அப்போது அடையாளம் தெரியாத நபர்கள் பர்மிஷ் வர்மா வந்த காரை வழிமறித்து துப்பாக்கியால் சுட்டுவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர். இந்த தாக்குதலில் படுகாயமடைந்த பர்மிஷ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், பர்மிஷ் வர்மாவை துப்பாக்கியால் சுட்டவரை போலீசார் இன்று கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

இதுதொடர்பாக போலீசார் கூறுகையில், பாப் பாடகர் பர்மிஷ் வர்மாவை துப்பாக்கியால் சுட்டவரை கைது செய்துள்ளோம். விசாரணையில், அவர் இமாசலப்பிரதேசம் சோலன் மாவட்டம் பட்டி பகுதியை சேர்ந்த ஹர்விந்தர் சிங் என்ற ஹேப்பி என தெரிய வந்தது. தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி வருகிறோம் என்றனர். #Tamilnews