செய்திகள்

ஜோதிபாசு 8-வது நினைவுநாள்: மம்தா பானர்ஜி புகழாஞ்சலி

மேற்கு வங்காளம் மாநில முதல் மந்திரியாக தொடர்ந்து ஐந்துமுறை 23 ஆண்டுகள் பதவிவகித்து காலஞ்சென்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் ஜோதி பாசுவின் 8-வது நினைவுநாளையொட்டி மம்தா பானர்ஜி புகழாஞ்சலி சூட்டியுள்ளார்.

மாலை மலர்

கொல்கத்தா:

மிகவும் கட்டுபெட்டியான குடும்பத்தில் பிறந்த நிஷிகந்தா பாசு - ஹேமலதா தம்பதியரின் மகனாக 8-7-1914 அன்று பிறந்த ஜோதிபாசு, 1920-ம் ஆண்டு கொல்கத்தாவில் உள்ள லொரெட்டோ பள்ளியில் சேர்க்கப்பட்டார்.

பள்ளிக்கல்வியை கொல்கத்தாவில் முடித்த அவர், 1935 ம் ஆண்டு பாரிஸ்டர்’ (வக்கீல்) பட்டம் படிப்பதற்காக லண்டன் சென்றார். அந்த சமயத்தில், இந்திய சுதந்திரப் போராட்டம் தீவிரமாக நடந்தது. எனவே, லண்டனில் இருந்தபடியே அங்கிருந்த இந்திய மாணவர்களுடன் இணைந்து ஆங்கில ஏகாதிபத்தியத்துக்கு எதிராக ஜோதிபாசு போராடினார். அதன் தொடர்ச்சியாக, இங்கிலாந்தில் உள்ள கம்யூனிச தலைவர்களின் நெருக்கம் அவருக்கு கிடைத்தது. ரஜனி பால்ம் தத்தா உள்ளிட்ட தலைவர்களின் வழியில் கம்யூனிஸ்டு பாதையில் நடக்க ஆரம்பித்தார்.

1940-ம் ஆண்டில், பாரிஸ்டர்’ பட்டம் பெற்றார். பின்னர், ஒரு வக்கீலாக மட்டுமல்லாமல் தீவிர கம்யூனிஸ்டாகவும் இந்தியாவுக்கு திரும்பினார். இந்திய கம்யூனிஸ்டு கட்சியில் இணைந்தார். ஆனால், அவர் இந்தியா திரும்பிய அந்த ஆண்டில் தான் கம்யூனிஸ்டு கட்சிக்கு ஆங்கிலேய அரசு தடை விதித்தது. 1943-ம் ஆண்டு நடந்த கம்யூனிஸ்டு கட்சியின் சட்ட மாநாட்டில், மாகாண கமிட்டி அமைப்பாளராக தேர்வு செய்யப்பட்டார். ரெயில்வே தொழிற்சங்கத்தில் இணைந்து பல்வேறு போராட்டங்களை நடத்தினார்.

1946-ம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சியின்போது நடந்த வங்காள சட்டசபை தேர்தலில், ரெயில்வே தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். முதன் முதலில் களம் கண்ட தேர்தலில் வெற்றி வாகை சூடினார். அன்றிலிருந்து 2001-ம் ஆண்டு வரை மேற்கு வங்காள சட்டசபைக்கு தொடர்ந்து வெற்றி பெற்று வந்தார். இடையில் 1972-ம் ஆண்டு மட்டும் தோல்வி அடைந்தார்.

1977 முதல் 2000-ம் ஆண்டுவரை தொடர்ந்து ஐந்துமுறை 23 ஆண்டுகள் மேற்கு வங்காளம் மாநில முதல் மந்திரியாக பதவி வகித்ததன் மூலம் இந்தியாவிலேயே சாதனை முதல்வராக விளங்கிய ஜோதிபாசு கடந்த 17-1-2010 அன்று காலமானார்.

அவரது எட்டாவது நினைவுநாளையொட்டி மேற்கு வங்காளம் மாநில முதல் மந்திரி மம்தா பானர்ஜி இன்று தனது டுவிட்டர் பக்கத்தில் புகழாஞ்சலி சூட்டியுள்ளார். #tamilnews