செய்திகள்

செங்கோட்டை பராமரிப்புக்கு தனியார் ஒப்பந்தம் - மத்திய அரசை தாக்கும் மம்தா

செங்கோட்டையை பராமரிக்க தனியார் நிறுவனத்துடன் மத்திய அரசு ஒப்பந்தம் செய்ததற்கு மேற்கு வங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். #RedFort #Mamata

மாலை மலர்

கொல்கத்தா:

இந்தியாவின் புகழ்பெற்ற நினைவுச் சின்னங்களில் ஒன்றாக செங்கோட்டை உள்ளது. பாரம்பரிய சின்னங்களை பராமரிக்கும் திட்டத்தின் கீழ் டெல்லி செங்கோட்டையை பராமரிக்கும் பொறுப்பு தி டால்மியா பாரத் குரூப்பிடம் மத்திய அரசு ஒப்படைத்துள்ளது. இதற்காக ஆண்டுக்கு ரூ.5 கோடி அந்த நிறுவனத்துக்கு மத்திய அரசு வழங்கும்.

இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கடந்த ஆண்டு போடப்பட்டது. 5 ஆண்டுகளுக்கு ரூ.5 கோடி வீதம், ரூ.25 கோடியை டால்மியா நிறுவனம் பெற்றுக்கொண்டு டெல்லி செங்கோட்டையை பராமரிக்க இருக்கிறது. இந்தத் திட்டத்துக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றன.

பாரம்பரியச் சின்னத்தை அரசு நிறுவனம் பராமரிக்காமல் தனியாரிடம், கார்ப்பரேட் நிறுவனத்திடம் ஒப்படைப்பது ஏற்கமுடியாது என கண்டனம் தெரிவித்துள்ளன.

இந்நிலையில், செங்கோட்டையை பராமரிக்க தனியார் நிறுவனத்துடன் மத்திய அரசு ஒப்பந்தம் செய்ததற்கு மேற்கு வங்காள முதல் மந்திரி  மம்தா பானர்ஜி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் டுவிட்டரில் கூறுகையில், நாட்டின் அடையாளமாக திகழ்வது டில்லி செங்கோட்டை. இதை பாதுகாப்பதில் மத்திய அரசு ஏன் அக்கறை காட்டுவதில்லை? வரலாற்றில் இது மிகவும் துக்கமான, கருப்பு தினம். 

மத்திய அரசு வரலாற்று சின்னங்களை பாதுகாப்பதில் அக்கறை காட்டுவதில்லை. செங்கோட்டை பராமரிப்பை தனியார் நிறுவனத்திடம் அளித்தால், அப்புறம் தேசிய கொடியை எங்கு ஏற்றுவீர்கள்? என கேள்வி எழுப்பியுள்ளார். #RedFort #Mamata #Tamilnews