செய்திகள்

மேற்கு வங்க முதல்-மந்திரியை சந்திக்கிறார் ஷமியின் மனைவி

வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் கூறிய அவரது மனைவி ஹசின் ஜகான் மேற்குவங்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜியை நாளை சந்திக்க இருக்கிறார். #HasinJahan #MohammadSami

மாலை மலர்

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீரர்களில் ஒருவர் முகமது ‌ஷமி. இவர் மீது அவரது மனைவி ஹசின் ஜகான் அதிரடியான குற்றச்சாட்டுகளை கூறினார்.

முகமது ‌ஷமியும், அவரது குடும்பத்தினரும் சேர்ந்து தன்னை கொடுமைப்படுத்திய தாகவும், முகமது ‌ஷமிக்கு பல பெண்களுடன் தொடர்பு இருப்பதாகவும் புகார் தெரிவித்தார்.

மேலும் பாகிஸ்தான் பெண்ணிடம் இருந்து பணம் பெற்றுக்கொண்டு சூதாட்டத்தில் ஈடுபட்டதாகவும் ஹசின் ஜகான் பரபரப்பான குற்றச்சாட்டை தெரிவித்தார். இது தொடர்பாக கொல்கத்தா போலீசார் ‌ஷமி மற்றும் அவரது குடும்பத்தினர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

சூதாட்ட புகார் கூறப்பட்டதால் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் ஊழல் தடுப்பு குழுவும் விசாரணை நடத்தி வருகிறது. இந்த விசாரணையில் ‌ஷமி 2 நாட்கள் துபாயல் தங்கி இருந்தது உறுதி செய்யப்பட்டது.

இந்த நிலையில் திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும், மேற்கு வங்காள முதல்-மந்திரியுமான மம்தா பானர்ஜியை முகமது ‌ஷமியின் மனைவி ஹசின் ஜகான் நாளை (வெள்ளிக்கிழமை) சந்திக்கிறார். இதற்கான அனுமதியை அவர் ஏற்கனவே கேட்டு  இருந்தார்.

முகமது ஷமி கூறிய குற்றச்சாட்டு குறித்தும், தனது நிலைப்பாடு பற்றியும் அவர் மம்தாவிடம் எடுத்துரைப்பார். தனக்கு நீதி வேண்டும், உண்மை வெளியே வரவேண்டும் என்று ஹசின் ஜகான் ஏற்கனவே கூறி இருந்தார்.