ஆயுதங்களுடன் மாலி ராணுவ வீரர்கள் 
செய்திகள்

மாலியில் அதிபர், பிரதமர் கைது: ஆட்சி கவிழ்ப்பா?

மாலியில் ஆயுதங்களுடன் தெருவில் ராணுவ வீரர்கள் நடமாடும் நிலையில், அதிபர் மற்றம் பிரதமர் கைது செய்யப்பட்டுள்ளதாக கலகம் செய்யும் ராணுவத்தின் தலைவர்களில் ஒருவர் தெரிவித்துள்ளார்.

மாலை மலர்

மாலி நாட்டின் தலைநகர் பமாகோவில் இருந்து 15 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள நகரம் காதி. இங்குள்ள ராணுவத் தளம் அருகே இன்று துப்பாக்கியால் சுடும் சத்தம் கேட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும், ராணுவ வீரர்கள் தெருக்களில் துப்பாக்கியால் வானத்தை நோக்கி சுட்டுக்கொண்டே சென்றதாக தெரிகிறது. மேலும், ராணுவ டாங்கிகள் நகரத்தில் வளம் வந்தன. இது ராணுவத்தின் ஆட்சி கவிழ்ப்பிற்கான சதியாக இருக்கலாம் என கூறப்பட்டது.

இதனால் ராணுவ வீரர்களிடம் பிரதமர் பவ்பவ் சிஸ்சே பேச்சு வார்த்தைக்கு அழைப்பு விடுத்திருந்தார். கிளர்ச்சியாளர்கள் மிகப்பெரிய அளவில் உருவானதற்கு காரணமாக யார் இருக்கிறார்கள் என்று உடனடியாக தெரியவில்லை.

இதற்கிடையில் மாலி நாட்டின் மந்திரிகள், சில ராணுவ அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அதிபர் இப்ராகிம் பவுபக்கர் கெய்டா மற்றும் பிரதமர் ஆகியோர் அதிபர் வீட்டில் கைது செய்யப்பட்டுள்ளதாக கலகம் செய்யும் ராணுவத்தினரின் தலைவர்களில் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதனால் மாலியில் ராணுவம் ஆட்சியை பிடித்துள்ளதாக கூறப்படுகிறது.