செய்திகள்

மாலத்தீவு அதிபர் இப்ராஹிம் முகமது சோலிஹ் பிரதமர் மோடியுடன் சந்திப்பு

அரசுமுறை பயணமாக இந்தியா வந்துள்ள மாலத்தீவு அதிபர் இப்ராஹிம் முகமது சோலிஹ் பிரதமர் மோடி, சுஷ்மா சுவராஜ் ஆகியோரை இன்று சந்தித்து ஆலோசனை நடத்தினார். #MaldivesPresident #IbrahimMohamedsolih #Modi

புதுடெல்லி:

மாலத்தீவு நாட்டின் புதிய அதிபராக கடந்த மாதம் 17-ம் தேதி இப்ராஹிம் முகமது சோலிஹ் பதவியேற்ற விழாவில் பிரதமர் மோடி பங்கேற்று வாழ்த்து தெரிவித்தார். அப்போது இந்தியாவுக்கு வருமாறு  இப்ராஹிம் முகமது சோலிஹ்-க்கு அவர் அழைப்பு விடுத்திருந்தார்.

அந்த அழைப்பை ஏற்று மூன்றுநாள் அரசுமுறை பயணமாக  இப்ராஹிம் முகமது சோலிஹ் டெல்லி வந்துள்ளார். ரெய்சினா ஹில்ஸ் பகுதியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் அவருக்கு முப்படைகளின் அணிவகுப்புடன் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

பின்னர், வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ், பிரதமர் நரேந்திர மோடி ஆகியோரை இங்குள்ள ஐதராபாத் இல்லத்தில்  இப்ராஹிம் முகமது சோலிஹ் இன்று சந்தித்து ஆலோசனை நடத்தினார். இருநாடுகளுக்கு இடையிலான நல்லுறவுகளை பலப்படுத்துவது தொடர்பாக நடந்த இந்த ஆலோசனைகளின்போது இருநாடுகளை சேர்ந்த உயரதிகாரிகளும் உடனிருந்தனர்.

மாலத்தீவின் முன்னாள் அதிபர் அப்துல்லா யாமீன் இந்தியாவுடன் நட்பு வைத்துகொண்டே சீனாவுடன் அதிக நெருக்கம் காட்டி வந்தார்.

இந்நிலையில், அதிபராக பதவி ஏற்ற பின்னர் முதல் வெளிநாட்டு பயணமாக இந்தியாவுக்கு வந்துள்ள  இப்ராஹிம் முகமது சோலிஹ் ஆட்சிக் காலத்தில் இந்தியா-மாலத்தீவு இடையிலான நட்பு மேலும் பலப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.#MaldivesPresident #IbrahimMohamedsolih #Modi

SCROLL FOR NEXT