செய்திகள்

மகளுக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்த தந்தை: 12000 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கலாம் என தகவல்

மலேசியாவைச் சேர்ந்த ஒருவர் தன் மகளுக்கு 600-க்கும் மேற்பட்ட முறை பாலியல் தொந்தரவு கொடுத்ததாக தொடரப்பட்ட வழக்கில் அவருக்கு 12000 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மாலை மலர்

மலேசியாவில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களை விசாரிப்பதற்காக கடந்த ஜூன் மாதம் சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்பட்டது. இந்த நீதிமன்றத்தில் தற்போது வந்திருக்கும் ஒரு வழக்கு, நீதித்துறையை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது.

மனைவியை விவாகரத்து செய்த 36 வயதான நபர் ஒருவர் தன்னுடன் வளர்ந்து வரும் 15 வயது மகளை தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்ததுடன், பாலியல் தொந்தரவுகளும் கொடுத்துள்ளார். இதுபற்றி அந்த சிறுமியின் தாய்க்கு தெரியவர அவர் இதுபற்றி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதில், கடந்த ஜனவரி மாதம் முதல் ஜூலை மாதம் வரை மகளை பலமுறை பலாத்காரம் செய்ததாக குற்றம்சாட்டப்பட்டது.

அதன் அடிப்படையில் கடந்த மாதம் 26-ம் தேதி அவரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரது ஜாமீன் மனுவை நீதிபதி நிராகரித்துவிட்டார்.

இவ்வழக்கில் குற்றவாளி மீதான குற்றச்சாட்டுகள் கடந்த இரு தினங்களுக்குமுன் பதிவு செய்யப்பட்டது. அதில், மகளை பலாத்காரம் செய்து சித்ரவதை செய்தது தொடர்பாக 626 குற்றச்சாட்டுகள் கூறப்பட்டுள்ளன. இதனை படித்துப் பார்க்க நீதிமன்ற அதிகாரிகளுக்கு இரண்டு நாட்கள் ஆகின. இன்று குற்றச்சாட்டு முழுவதையும் படித்து முடித்ததையடுத்து, விசாரணை தொடங்க உள்ளது.