செய்திகள்

அணிகள் இணைந்தும் மனங்கள் இணையவில்லையே: டாக்டர் மைத்ரேயன் எம்.பி. அதிருப்தி

அணிகள் இணைந்தும் மனங்கள் இணையவில்லையே என்று ஓ.பன்னீர்செல்வம் அணியை சேர்ந்த டாக்டர் மைத்ரேயன் எம்.பி. தன்னுடைய முகநூல் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ளார்.

மாலை மலர்

ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் ஒரு அணியும், எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஒரு அணியும் செயல்பட்டு வந்தது. ஓ.பன்னீர்செல்வம் அணியில் முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, நத்தம் விஸ்வநாதன், பொன்னையன், முன்னாள் சபாநாயகர் பி.எச்.பாண்டியன், டாக்டர் மைத்ரேயன் எம்.பி. உள்பட பலர் இடம் பெற்று இருந்தனர்.

இந்த அணியினர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று போர்க்கொடியை தூக்கினார்கள்.

இதற்கிடையில், இரு அணிகள் இடையேயான இணைப்பு குறித்த பேச்சுவார்த்தை பல மாதங்களாக நீடித்தது. இணைப்பு பேச்சுவார்த்தையில், ஜெயலலிதா மரணம் தொடர்பாக நீதி விசாரணை வைத்தால் மட்டுமே இணைப்பு சாத்தியம் ஆகும் என்று ஓ.பன்னீர்செல்வம் அணியினர் திட்டவட்டமாக தெரிவித்தனர்.

அதன் அடிப்படையில், ஜெயலலிதா மரணம் தொடர்பாக எடப்பாடி பழனிசாமி, விசாரணை ஆணையம் அமைக்கப்படும் என்று தெரிவித்தார். இதையடுத்து கடந்த ஆகஸ்டு மாதம் 21-ந்தேதியன்று, ஓ.பன்னீர்செல்வம்-எடப்பாடி பழனிசாமி அணிகள் இணைப்பு சாத்தியம் ஆனது. ஓ.பன்னீர்செல்வம் துணை முதல்-அமைச்சராக பொறுப்பேற்றார்.

இந்த நிலையில், இரு அணிகளும் இணைந்து 3 மாதங்கள் நிறைவுற்றுள்ள நிலையில், ஓ.பன்னீர்செல்வம் அணியில் இருந்த டாக்டர் மைத்ரேயன் எம்.பி. நேற்று தன்னுடைய முகநூல் பக்கத்தில் (பேஸ்புக்) ‘இரு அணிகள் இணைந்தும், மனங்கள் இணையவில்லையே’ என்று அதிருப்தியில் ஒரு கருத்தை பதிவு செய்து இருந்தார். டாக்டர் மைத்ரேயன் எம்.பி. தன்னுடைய அதில் பதிவு செய்த கருத்து வருமாறு:-

‘ஓ.பி.எஸ். - ஈ.பி.எஸ். அணிகள் இணைந்து இன்றோடு மூன்று மாதங்கள் நிறைவுற்று, நான்காவது மாதம் தொடங்குகிறது. மாதங்கள் உருண்டோடுகின்றன. மனங்கள்?..’