செய்திகள்

அ.தி.மு.க.வில் மைத்ரேயன் எம்.பி. அதிருப்தி

எடப்பாடி பழனிசாமி அணியும், ஓ.பன்னீர்செல்வம் அணியும் இணைவதற்கும், அ.தி.மு.க. கட்சியை ஒன்று சேர்த்து இரட்டை இலை சின்னத்தை பெற்று கொடுத்ததிலும் முக்கிய பங்காற்றிய மைத்ரேயன் எம்.பி. கடும் அதிருப்தியில் உள்ளார்.

மாலை மலர்

அ.தி.மு.க.வில் செல்வாக்கு மிக்க தலைவர்களில் ஒருவராக வலம் வந்தவர் மைத்ரேயன் எம்.பி.

ஜெயலலிதா மறைவுக்கு பிறகு சசிகலாவுக்கு எதிரான நிலைப்பாட்டில் தீவிரம் காட்டியவர்.

அ.தி.மு.க.வை உடைத்து அ.தி.மு.க. புரட்சித் தலைவி அம்மா கட்சியை ஓ.பன்னீர்செல்வம் உருவாக்கியபோது டெல்லி தேர்தல் கமி‌ஷன் தொடர்பான பணிகளை முன்னின்று கவனித்தவர் மைத்ரேயன் எம்.பி.

பிரதமர் மோடியை ஓ.பன்னீர் செல்வம் சந்திக்க பாலமாக செயல்பட்டவர்களில் மைத்ரேயன் எம்.பி.யின் பங்கும் முக்கியமாகும்.

எடப்பாடி பழனிசாமி அணியும், ஓ.பன்னீர்செல்வம் அணியும் இணைவதற்கும், அ.தி.மு.க. கட்சியை ஒன்று சேர்த்து இரட்டை இலை சின்னத்தை பெற்று கொடுத்ததிலும் இவரது பங்களிப்பு அதிகம் உண்டு.


அப்படிப்பட்ட மைத்ரேயன் எம்.பி. இப்போது ஓ.பன்னீர்செல்வம் மீது கடும் அதிருப்தியில் உள்ளார்.

அ.தி.மு.க. இணைந்த பிறகு கட்சியில் ஓ.பன்னீர்செல்வம் ஒருங்கிணைப்பாளராகி விட்டார். முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி துணை ஒருங்கிணைப்பாளராகி விட்டார். வைத்தியலிங்கம் எம்.பி.க்கும் பதவி கிடைத்து விட்டது. ஆனால் அதன் பிறகு முக்கியமானவர்களுக்கு இன்னும் பதவிகள் கொடுக்கப்படவில்லை.

ஓ.பன்னீர்செல்வம் எதையும் கண்டு கொள்ளாமல் அவர் வேலையை மட்டும் பார்த்து கொள்வதாகவும் நம்பி வந்தவர்களை கை விட்டு விட்டார் என்று அவரது ஆதரவாளர்கள் புலம்புகின்றனர்.

இந்த நிலையில் மைத்ரேயன் எம்.பி.யும், ஓ.பன்னீர் செல்வம் செயல்பாட்டில் அதிருப்தி அடைந்துள்ளார். கடந்த சில மாதங்களாக தனக்கு கட்சியில் முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை என்பதால் தலைமை கழகத்துக்கு இப்போது மைத்ரேயன் வருவதில்லை.

இதுபற்றி மைத்ரேயன் எம்.பி.யின் ஆதரவாளரிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

மைத்ரேயன் எம்.பி. அம்மா காலத்திலேயே செல்வாக்குடன் விளங்கியவர். சென்னை, காஞ்சீபுரம் மாவட்ட பொறுப்பாளராக இருந்து கட்சிக்காரர்களுக்கு உதவியவர். அ.தி.மு.க. பிளவுபட்டபோது கட்சியை ஒன்று சேர்க்க பாடுபட்டவர்.

பிரதமர் மோடியை ஓ.பன்னீர்செல்வம் நினைத்த நேரம் எல்லாம் பார்க்க வைத்தவர். அப்படிப்பட்ட மைத்ரேயன் எம்.பி.யை ஓ.பன்னீர்செல்வம் உதாசீனப்படுத்தியதால் இன்று பிரதமரை பார்க்க முடியாமல் உள்ளார். இதுதான் உண்மை நிலவரம்.

மைத்ரேயன் எம்.பி.யை கட்சியில் பயன்படுத்துவதும் பயன்படுத்தாததும் ஓ.பி.எஸ். கையில்தான் உள்ளது.

மைத்ரேயன் எம்.பி. கட்சியில் தனது திறமையை 8 மாதமாக நிரூபித்து காட்டி உள்ளார். எனவே அவரது திறமை மீது அவருக்கு முழு நம்பிக்கை உள்ளது.

எனவே மைத்ரேயன் எம்.பி.யை உதாசீனப்படுத்தினால் அதன் முடிவுகளை அவர்களே அனுபவிப்பார்கள். மைத்ரேயன் எம்.பி.யின் நிலைப்பாடு பற்றி காலம் தான் பதில் சொல்லும். பொறுத்திருப்போம்.