செய்திகள்

அ.தி.மு.க. அணிகள் இணைப்பு பேச்சு நடைபெறவில்லை: மைத்ரேயன் எம்.பி. தகவல்

அ.தி.மு.க. இரு அணிகளும் இணைவதற்கு பேச்சு வார்த்தை நடைபெறுவதாக வெளிவரும் செய்திகள் அனைத்தும் வதந்திகள்தான். அதில் உண்மை இல்லை என்று மைத்ரேயன் எம்.பி. கூறி உள்ளார்.

மாலை மலர்

ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அ.தி.மு.க. இரண்டாக பிளவுபட்டது. ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் அ.தி.மு.க. புரட்சித்தலைவி அம்மா அணியும், சசிகலா தலைமையில் அ.தி.மு.க. அம்மா அணியும் உருவானது.

இரண்டு அணியினரும் கட்சியின் இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்காக தேர்தல் கமி‌ஷனில் பிரமான பத்திரங்களை தாக்கல் செய்து வருகின்றனர்.

இதனால் தீர்ப்பு வரும் வரை யாரும் இரட்டை இலை சின்னத்தை பயன்படுத்த கூடாது என்று தேர்தல் கமி‌ஷன் தடை விதித்துள்ளது.

இந்த நிலையில் இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்காக தேர்தல் கமி‌ஷனுக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரனை டெல்லி போலீசார் கைது செய்து திகார் ஜெயிலில் அடைத்திருந்தனர்.

41 நாட்கள் ஜெயிலில் இருந்த அவர் கடந்த திங்கட்கிழமை ஜாமீனில் வெளியே வந்தார். அவர் நிருபர்களிடம் கூறும்போது, நான் ஒதுங்கி இருப்பதால் அ.தி.மு.க. இரு அணிகளும் இணையும் என்று எதிர்பார்த்தேன். ஆனால் இதுவரை அது நடைபெறுவதற்கான அறிகுறி இல்லை. எனவே நான் மீண்டும் கட்சியில் தீவிரமாக பணியாற்றுவேன் என்றார்.

ஆனால் டி.டி.வி.தினகரன் கட்சியில் ஒதுக்கி வைக்கப்பட்டு இருப்பதால் அவரோடு யாரும் தொடர்பு கொள்ள மாட்டார்கள் என்று அமைச்சர் ஜெயக்குமார் அறிவித்தார்.

ஆனால் டி.டி.வி. தினகரனை இதுவரை 31 எம்.எல்.ஏ.க்கள் நேரில் சென்று பார்த்து ஆதரவு தெரிவித்துள்ளனர். இதனால் அ.தி.மு.க. அம்மா அணியில் தினகரன் கை ஓங்கியுள்ளது.

அமைச்சர் ராஜேந்திர பாலாஜியும், டி.டி.வி. தினகரனுக்கு ஆதரவு தெரிவித்து பேசி வருகிறார்.

இதனால் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அரசுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. 2 அணியாக இருந்த அ.தி.மு.க. இப்போது 3 அணியாகி விட்டது.

டி.டி.வி.தினகரனின் இத்தகைய நெருக்கடியை சமாளிக்க ஓ.பி.எஸ். அணியும், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அணியும் இணைவதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும், சசிகலா, தினகரனை நீக்கி விட்டு ஓ.பன்னீர்செல்வத்துக்கு பொதுச்செயலாளர் பதவி வழங்கும் வகையில் பேச்சு வார்த்தை நடைபெறுவதாகவும் தகவல் வெளியாகி வருகிறது.

இதுபற்றி ஓ.பி.எஸ். ஆதரவு எம்.பி. மைத்ரேயனிடம் கேட்டதற்கு அவர் கூறியதாவது:-

டி.டி.வி. தினகரனை எம்.எல்.ஏ.க்கள் சென்று பார்ப்பது அவர்களது உள்கட்சி பிரச்சினையாகும்.

ஆனால் கடந்த சில நாட்களாக இரு அணிகளும் இணைவதற்கு பேச்சு வார்த்தை நடைபெறுவதாக வெளிவரும் செய்திகள் அனைத்தும் வதந்திகள்தான். அதில் உண்மை இல்லை.

சசிகலா, தினகரன் குடும்பத்தை நீக்கி வைத்தால்தான் பேச்சுவார்த்தை நடைபெறும் என்று ஏற்கனவே நாங்கள் தெளிவாக கூறி விட்டோம். அதில் முடிவு தெரியாமல் எந்த பேச்சு வார்த்தையும் நடக்காது. பேச்சுவார்த்தைக்கு தற்போது தற்காலிகமாக முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு விட்டது.

இன்றைக்கு எடப்பாடி பழனிசாமியின் அணி மிகவும் பலவீனப்பட்டு விட்டது. சொந்த எம்.எல்.ஏ.க்களை கூட அவரால் தக்க வைக்க முடியுமா? என்ற கேள்விக்குறி ஏற்பட்டு உள்ளது.

இந்த சூழ்நிலையில் யாராக இருந்தாலும் ஓ.பன்னீர்செல்வம் தலைமையை ஏற்று இணைவதுதான் நல்லது.

அ.தி.மு.க. தொண்டர்களின் விருப்பத்துக்கு ஏற்ப பொதுமக்கள் ஆதரவு மதிப்பளிக்கும் வகையில் எடப்பாடி அணியினர் வந்து இணைய வேண்டும்.

தினகரனை ஒதுக்கி வைப்பதாக எடப்பாடி பழனிசாமி அணியினர் கூறி வந்த நிலையில் அவரை இப்போதும் எம்.எல்.ஏ.க்கள் சென்று பார்த்து வருவது பற்றி நாங்கள் அப்போதே சந்தேகித்தோம். அந்த குடும்பத்தை இவர்களால் நீக்க முடியாத சூழ்நிலைதான் உள்ளது.

எனவே இப்போது அந்த அணியில் நடைபெறுவது நாடகமா? அல்லது பிளாக் மெயிலா? என்பது விரைவில் தெரிந்து விடும்.

ஓ.பன்னீர்செல்வத்துக்கு பொதுச்செயலாளர் பதவி கொடுக்கப்படுவதாக வதந்தி பரப்பப்படுகிறது. இது தொடர்பாக யார்? எப்படி? வாக்குறுதி கொடுக்க முடியும்?

எனவே ஓ.பன்னீர்செல்வம் தலைமையை ஏற்று அனைவரும் இங்கு வந்து இணைவதுதான் தற்போதைய பிரச்சினைகள் அனைத்துக்கும் நிரந்தர தீர்வாக அமையும்.

இவ்வாறு அவர் கூறினார்.